நாட்டின் கரையோரத்தை நள்ளிரவு முதல் தாக்கிய 'புரவி'

பலத்த காற்றுடன் கடும் மழை பெய்ததால் கடல் மட்டமும் உயர்ந்தது

இந்திய கரையை நாளை சென்றடையும்

பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனர்த்த நிவாரண குழுக்கள், படையினர் மக்களுக்கு பேருதவி

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த 'புரவி' சூறாவளி நேற்று நள்ளிரவு இலங்கையின் கிழக்கு கரையோரத்தை தாக்கத் தொடங்கியது.

மன்னார் விடத்தல்தீவு கிராமத்தில் உள்ள பல வீடுகளில் கடல் நீர் உட்புகுந்துள்ளது.

திருகோணமலைக்கும் பருத்தித்துறைக்கும் இடைப்பட்ட பகுதியில் நேற்று நள்ளிரவு 'புரவி' சூறாவளி தாக்கத் தொடங்கியது. காற்றின் வேகம் சுமார் 80 முதல் 100 கிலோ மீட்டர் வரையில் காணப்பட்டதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்தது..

இன்று சூறாவளி அதன் வேகத்தை குறைத்து மன்னார் வளைகுடாவுக்கு பிரவேசிக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்தது. நேற்றுக் காலை முதல் வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாடு முழுவதும் கடும் மழையுடன் பலத்த காற்று வீசியது. திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை மற்றும் பூநகரியில் இருந்து புத்தளம் வரையிலான கரையோர பிரதேசங்களில் கடல் அலை சுமார் ஒரு மீட்டருக்கு உயர்ந்ததுடன் கரையோர பகுதிகளில் கடல் நீர் உட்புகத் தொடங்கியது.

அதனையடுத்து நாட்டில் பல்வேறு பகுதிகளில் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதுடன் நாட்டின் சில பகுதிகளில் 200 மில்லி மீட்டர் வரை பலத்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் வடக்கு, வடமேல் மாகாணங்களில் 150 மில்லி மீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அதேவேளை கிழக்கு, வடமத்திய, மத்திய,சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீட்டருக்கு அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேவேளை மேற்படி சூறாவளியின் பாதிப்புகளை வெற்றிகரமாக எதிர் கொள்ளக்கூடிய வகையில் முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததால் மீட்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டன. அனர்த்த நிவாரண குழுக்களும் களத்தில் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

நேற்று காலை தொடக்கம் மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மன்னார் மாவட்டங்களில் அதிகரித்த காற்று மற்றும் தொடர்ச்சியான மழை நீடித்தது.மக்கள் வீடுகளில் முடங்கிய நிலையில் இருந்தனர். தொடர்ச்சியாக மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துள்ளதுடன் கடலை அண்டிய பகுதிகளில் உள்ள வீடுகளில் கடல் நீர் நுழைத்துள்ளமையையும் அவதானிக்கக் கூடியதாக உள்ளது.

மத்திய மலைநாட்டில் (02) காலை முதல் மப்பும் மந்தாரமுமாக காலநிலை காணப்பட்டதுடன். அடிக்கடி பல இடங்களில் பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் பல இடங்களில் கலுகல,கித்துல்கல,பிட்டவல, கினிகத்தேனை,கடவல,வட்டவளை,ஹற்றன் உள்ளிட்ட இடங்களிலும்,ஹற்றன் நுவரெலியா பிரதான வீதியில் ஹற்றன் குடாகம,கொட்டகலை,தலவாக்கலை சென் கிளையர்,ரதல்ல நானுஓயா உள்ளிட்ட இடங்களிலும் அடிக்கடி பனிமூட்டம் காணப்படுகின்றன. இதனால் இவ்விதிகள் பயன்படுத்தும் வாகன சாரதிகள் மிகவும் அவதானமாக தங்களது வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை