நீதிமன்ற வழக்குகளை துரிதகதியில் விசாரணை செய்து முடிக்க ஏற்பாடு

உயர்நீதிமன்றம் முதல் ஏனைய நீதிமன்றங்களிலும் நடவடிக்கை −நீதியமைச்சர்

நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான வழக்குகளை துரித கதியில் விசாரணை செய்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நிலைமையை அடுத்து இந்த ஏற்பாடுகள் துரிதப்படுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனடிப்படையில் உயர்நீதிமன்றத்தில் தொடங்கி ஏனைய நீதிமன்றங்களிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மெய்நிகர் நீதிமன்ற விசாரணைகள் நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார். பெரும்பாலும் இந்த நடைமுறை அடுத்த ஆண்டு ஆரம்பம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பான சட்ட வரைவை தற்போது உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தயாரித்து வருவதாகவும் பாராளுமன்றத்தில் யோசனை ஒன்றை முன்வைத்து இந்த விடயம் நிறைவேற்றப்படும் என்றும் நீதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

மெய்நிகர் அல்லது இணையம் மூலமான வழக்கு விசாரணைகள் தொடர்பாக பல ஆண்டுகளாக பேசப்பட்டு வருகின்றன. எனினும் கொரோனா பரவலை அடுத்து இந்த விடயம் தற்போது பேசும் பொருளாக மாறியிருக்கிறது.

இதற்கான நவீன வசதிகள் ஏற்கனவே பல நீதிமன்றங்களில் இருக்கின்றன.

எனவே அதனை பயன்படுத்தியும் மேலதிக நன்கொடைகள் போன்றவற்றை பயன்படுத்தியும் நீதிமன்றங்களை இணைய மூலமான வழக்குகளுக்காக தயார் செய்வதே தமது நோக்கம் என நீதி அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த செயற்பாடுகளின் கீழ் வழக்குகளுக்கான புதிய திகதிகளை வழங்குதல், எழுத்து மூலமான வாய்மொழி மூலமான சமர்ப்பிப்புக்களை மற்றும் ஆதாரங்களை பதிவு செய்தல் உட்பட பல நடவடிக்கைகளை இணையம் மூலம் மேற்கொள்ள முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது மாவட்ட நீதிமன்றங்களில் மாத்திரம் 2 இலட்சத்து 31 ஆயிரத்து 506 வழக்குகள் விசாரணை செய்யப்பட்டு வருகின்றன. சுமார் 4 ஆயிரத்து 620 வழக்குகள் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகவும் எந்த ஒரு முடிவும் இன்றி விசாரிக்கப்பட்டு வருகின்றன.

அதே நேரத்தில் 3 ஆயிரத்து 418 வழக்குகள் 15 முதல் 20 வருடங்களாக நிலுவையில் உள்ளன. 8 ஆயிரத்து 947 வழக்குகள் கடந்த பத்து முதல் பதினைந்து வருடங்களாக விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

20 ஆயிரத்து 586 வழக்குகள் கடந்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த ஐந்து முதல் பத்து வருடங்கள் மாத்திரம் மொத்தம் 49 ஆயிரத்து 801வழக்குகள் மாத்திரமே விசாரிக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

 

Mon, 12/14/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை