நல்லாட்சியில் நீதித்துறை சுயாதீனமாகவே இருந்தது

சபையில் தலதா அத்துகோரல எம். பி உரை

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை சுயாதீனமாக இருந்தமையின் காரணமாகவே கோட்டாபய ராஜபக்‌ஷவால் ஜனாதிபதியாக முடிந்ததாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் நீதி அமைச்சு மற்றும் தொழில் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தோம். இதன்படி 19 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாங்கள் நிறைவேற்றினோம். இதனூடாக நீதித்துறை சுதந்திரத்தை உறுதிப்படுத்தியிருந்தோம்.

இப்போது பலர் நீதித்துறை சுதந்திரம் தொடர்பாக கதைக்கின்றனர். அந்த நீதித்துறை சுதந்திரம் காரணமாகதான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஜனாதிபதியாக முடிந்தது. இரட்டைக் குடியுரிமை இருக்கும் போது வாக்குகேட்க முடியாது. இது தொடர்பான நீதிமன்றத்திற்கு சென்ற போது அது நிராகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி நீதித்துறையில் யாரும் தலையிடாத காரணத்தினாலேயே அவருக்கு ஜனாதிபதியாக முடிந்துள்ளது. அன்று அவருக்கு எதிராக வழக்குகள் தொடர்பாகவும் யாரும் தலையிடவில்லை. பிணைமுறி மோசடி எங்களின் அரசாங்கத்தின் மீது இருந்த பெரிய குற்றச்சாட்டாகும். இது தொடர்பாக விசாரணைகளை யாரின் ஆட்சியில் நடத்தியது. எங்களின் அரசாங்கத்திலேயே அந்த வழக்குகளும் நடத்தப்பட்டன. அதனை மூடி மறைக்கவும் முயற்சிக்கவில்லை. சிலர் இருந்த வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டனர். அதேபோன்று எங்களின் அரசாங்கத்தில் இருந்தவர்களுக்கு எதிராகவும் வழக்குகள் தொடரப்பட்டன. எந்தக் கட்டத்திலும் நீதித்துறையின் சுதந்திரத்தில் நாங்கள் தலையிடவில்லை.   

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை