குறுங்கோளில் பாறை மாதிரியை பெற்ற ஜப்பான் விண்கலம் பூமிக்கு திரும்பியது

குறுங்கோளில் இருந்து முதல் முறையாக கணிசமான அளவு பாறை மாதிரிகளை எடுத்துவந்த விண்கலம் அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய நிலையில் அது மீட்கப்பட்டுள்ளது.

ரியுகு என்ற குருங்கோளின் மாதிரிகளை கொண்ட இந்த விண்கலம் தெற்கு அவுஸ்திரேலியாவில் வூமேரா பகுதிக்கு அருகில் பரசூட்டில் தரையிறங்கியது.

ஓர் ஆண்டுக்கு மோலாக விண் பொருளை ஆராய்ந்த ஜப்பானில் ஹயபுசா–2 என்ற விண்கலமே இந்த மாதிரிகளை சேகரித்துள்ளது. ஹயபுசா–2 இல் இணைக்கப்பட்ட கொள்கலனே பின்னர் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தது.

இதனைத் தொடர்ந்த அந்தக் கொள்கலன் மீட்கப்பட்டிருப்பதாக ஹயபுசா–2 அதிகாரிகள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

சூரிய மண்டலத்தின் தொடக்கம், பூமியில் உயிர்களின் தொடக்கம் ஆகியவற்றுக்கான தடயங்கள் அந்த மாதிரிகளில் இருக்கக்கூடும் என்று நிறுவனம் கூறியது. அவை பெறப்பட்ட ரியுகு குறுங்கோள் பூமியிலிருந்து சுமார் 300 மில்லியன் கிலோமீற்றர் தூரத்தில் உள்ளது.

நேற்றுக் காலை பூமியை நோக்கி வருகையில், அந்த விண்கலம் நெருப்புப் பந்தாக உருமாறியது. தரையிலிருந்து சுமார் 10 கிலோமீற்றர் உயரத்தில் அதன் வான்குடை திறந்தது.

அந்தக் காட்சிக்காக 6 ஆண்டுகள் காத்திருந்ததாக அந்தத் திட்டத்தின் முகாமையாளர் குறிப்பிட்டார்.

குறுங்கோள்கள், சூரிய மண்டலத்தின் மிகப் பழமையானவை. உயிர்களின் தோற்றம் குறித்து அறியும் சாத்தியம் அவற்றில் இருக்கும் என நம்பப்படுகிறது.

இந்நிலையில் ஹயபுசா–2 க்கான பணிகள் முடிவடையவில்லை. அது இப்போது இரண்டு புதிய குறுங்கோள்களைக் குறிவைத்து விரிவாக்கப்பட்ட பணியைத் ஆரம்பிக்கும்.

ஜூலை 2026 இல் 2001 சிசி 21 என பெயரிடப்பட்ட அதன் இலக்கு குறுங்கோள்களில் முதலாவதை அணுகுவதற்கு முன்னர் சூரியனைச் சுற்றியுள்ள ஆறு சுற்றுப்பாதைகளை அது முடிக்கும்.

தொடர்ந்து ஹயபுசா–2 அதன் முக்கிய இலக்கான 1998 கே.வை.26 ஐ நோக்கி செல்லும், இது வெறும் 30 மீற்றர் விட்டம் கொண்ட பந்து வடிவ குறுங்கோளாகும். எனினும் ஹயபுசா–2 தரையிறங்குவதற்கும் சேகரிப்பதற்கும் சாத்தியமில்லை, ஏனெனில் அவற்றை பூமிக்கு திருப்பித் தர போதுமான எரிபொருள் இருக்காது.

Mon, 12/07/2020 - 14:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை