ஈஸ்டர் தாக்குதல் விசாரணையில் மஹிந்த திஸாநாயக்க, ரிஷாட் தொடர்பில் தெரிவித்த வாக்குமூலம் போலியானது

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் ஆராய்ந்து வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவின் சாட்சியத்தின் போது, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தொடர்பில் தெரிவித்திருக்கும் வாக்குமூலமானது போலியானது எனவும், அவற்றை பாராளுமன்ற உறுப்பினர் முற்றாக மறுத்துள்ளதாகவும் அவரது சட்டத்தரணியான ருஷ்தி ஹபீப் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளார்.

ரிஷாட் பதியுதீனின் சட்டத்தரணி ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மஹிந்த திஸாநாயக்கவுக்கு தனது சேவையாளரான பதியுதீன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தொலைபேசி அழைப்பை மேற்கொள்ளவில்லை எனவும் அவருடன் எந்தவொரு உரையாடல்களையும் நடத்தவில்லை என்பதுடன், அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் பொய்யானது என மறுத்துள்ளார்.

குருநாகல் அரச பொது வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மஹிந்த திஸாநாயக்கவுக்கு தொலைபேசி அழைப்பை எடுத்ததாக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டையும் முற்றுமுழுதாக மறுத்துள்ளார்.

குறித்த சாட்சியாளரான திஸாநாயக்கவின் தொலைபேசி உரையாடல்களை பரிசீலனை செய்து, இதன் உண்மைத்தன்மையை கண்டறிவதன் மூலம் திஸாநாயக்கவின் போலியான வாக்குமூலம் அம்பலமாகும் என ரிஷாட் பதியுதீன் பெரிதும் நம்புவதாகவும் அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

Tue, 12/15/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை