மலையக மக்களுக்கு சவாலாக இருந்து வரும் சுகாதாரத்துறை

சபையில் அமைச்சர் ஜீவன் தொண்டமான்

மலையகத்தில் சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வது ஒரு சவாலான விடயமாகவுள்ளது. வைத்தியசாலைகளில் உட்கட்டமைப்பு வசதிகள் போதாதுள்ளது. இது தொடர்பில் உடனடியாக சுகாதார அமைச்சர் கவனம் செலுத்த வேண்டுமென இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் வேண்டுகோள் விடுத்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் சுகாதார அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

நுவரெலியா, மஸ்கெலியா வைத்தியசாலைகளில் காணப்படும் உட்கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் மிகவும் குறைவாகும். மக்கள் தொடர்ச்சியாக இந்த விடயத்தை எமது கவனத்துக்கு கொண்டு வருகின்றனர். இங்குள்ள குறைப்பாடுகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். மலையகத்தில் காணப்படும் பிரதான ஆறு வைத்தியசாலைகளில் ஊழியர் பற்றாக்குறையும் உள்ளன. வைத்தியர்கள் மற்றும் தாதிமார்களுக்கு பற்றாக்குறை காணப்படுகிறது.

லிந்துலை வைத்தியசாலை மண்சரிவு அபாயத்தை எதிர்கொண்டுள்ளது. லிந்துலை வைத்தியசாலையை இடமாற்றம் செய்தால் மாத்திரமே மக்களுக்கு முறையான சுகாதார சேவையை வழங்க முடியும். மஸ்கெலியா மற்றும் கொட்டகலை வைத்தியசாலைகளில் காணப்படும் குறைப்பாடுகளும் தீர்க்கப்பட வேண்டும்.

உட்கட்டமைப்பு வசதிகள் மலையக வைத்தியசாலைகளில் குறைவாக உள்ள போதிலும் அவற்றை கவனத்தில் கொள்ளாது வைத்தியர்கள் மக்களுக்கு சேவையை வழங்கி வருகின்றனர்.

அதேபோன்று சிறுவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களுக்கான ஊட்டசத்து தொடர்பிலும் அதிகூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும். கடந்த 10 வருடத்தில் குறிப்பிடத்தக்களவு மரணங்களும் பதிவாகியுள்ளன.

வெளிமாவட்டங்களிலிருந்து பலர் மலையகப் பகுதிகளுக்கு வருகின்றனர். இதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும். கொவிட்19 பரவல் அதிகரித்துள்ளதுடன், அரசாங்கம் முடிந்தளவு கட்டுப்படுத்தி வருகிறது. மக்களும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். எமது அமைச்சின் ஊடாக பாதுகாப்பு படையினருக்கும் சுகாதாரத்துறையினருக்கும் தேவையான வசதிகளை செய்துக் கொடுத்துள்ளோம். தனிமைப்படுத்தப் பட்டுள்ளவர்களுக்கு நிவாரணமும் வழங்கி வருகிறோம்.

அக்கரப்பத்தனை, டயகம வைத்தியசாலைகளில் இருந்து நோயாளர்கள் கண்டிக்கும், நுவரெலியாவுக்கும் அனுப்பப்படுகின்றனர். கடந்த வாரம் ஒருவர் உயிரிழந்திருந்தார். நோயாளர்களுக்கு ஒவ்வொரு நிமிடமும் முக்கியமாகும். இவ்வாறான சம்பவங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இந்த நிலைமையை மாற்றியமைக்க வேண்டும்.

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன் 

 

Tue, 12/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை