பிரான்ஸில் இஸ்லாமியவாதிகளை குறி வைக்கும் சட்டத்திற்கு ஒப்புதல்

பிரான்ஸ் நாட்டில் அடுத்தடுத்து நடந்த தீவிரவாத தாக்குதல்களைத் தொடர்ந்து, தீவிர இஸ்லாமிவாதக் குழுக்களை எதிர்கொள்ளும் வகையில் கொண்டுவரப்படும் சட்டமூலத்திற்கு பிரான்ஸ் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பிரான்ஸ் நாட்டின் மதச்சார்பின்மை மதிப்பீடுகளை காப்பாற்றவும், வெறுப்புரைகளை கட்டுப்படுத்தவும், வீட்டுமுறைப் பாடசாலைகள் மீது கட்டுப்பாட்டை அதிகரிக்கவும் ஜனாதிபதி எமானுவேல் மக்ரோன் நீண்டகாலமாக வைத்திருந்த திட்டங்களில் ஒன்று இது.

இந்த சட்டத்தின் மூலம் பிரான்ஸ் அரசு ஒரு குறிப்பிட்ட மதத்தை குறிவைப்பதாக, பிரான்ஸிலும் வெளிநாட்டில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால், இதனை ‘பாதுகாக்கும் சட்டம்’ என்று கூறும் பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ் இது தீவிர முஸ்லிம் குழுக்களின் பிடியில் இருந்து முஸ்லிம்களை விடுவிக்கும் என்கிறார்.

பிரான்ஸின் குடியரசு மதிப்பீடுகளை ஆதரிக்கும் இந்த சட்டம், இணையத்தில் வெறுப்புரைகளை கட்டுப்படுத்தும், இஸ்லாமிய கோட்பாடுகளை போதிக்கும் ரகசிய பாடசாலைகளுக்கு தடை விதிக்கும், வீட்டு முறைப் பாடசாலைகள் மீதான கட்டுப்பாட்டை அதிகரிக்கும். தீய நோக்கத்தோடு இணையத்தைப் பயன்படுத்தி அடுத்தவர்களைப் பற்றிய தகவல்களை வெளியிடுவதை இந்த சட்டம் தடுக்கும்.

சாமுவேல் பேட்டி என்ற ஆசிரியர் தலைவெட்டிக் கொல்லப்பட்ட விவகாரத்துக்கான எதிர்வினையாகவே இந்த சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர் மாணவர்களுக்கு முகமது நபி தொடர்பான கேலிச்சித்திரத்தை காட்டியதற்காக ஒரு நபர் அவரை கொலை செய்தார். இஸ்லாமிய அமைப்புகளின் நிதி விவகாரங்களில் வெளிப்படத்தன்மையைக் கோரும் புதிய விதிகள் இந்த சட்டத்தில் உள்ளன.

பிரான்ஸ் அதிகாரிகள், பணியிடங்களில் மதம் சார்ந்த ஆடைகளை அணியக் கூடாது எனும் விதிமுறை போக்குவரத்துப் பணியாளர்கள் , சந்தை ஊழியர்கள் போன்றவர்களுக்கும் இந்த சட்டம் வழியாக விரிவுபடுத்தப்படுகிறது.

Fri, 12/11/2020 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை