மலையக பல்கலைக்கழகம் கொட்டகலையில்

- பாடத்திட்டங்கள் குறித்து விரைவில் முடிவு
- வீட்டுத்திட்டமும் ஜனவரி முதல் ஆரம்பம்

மலையக பல்கலைக்கழகம் அமைப்பதற்கான இடம் கொட்டகலையில் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் மலையக புத்திஜீவிகளுடன் கலந்துரையாடி பாடத்திட்டங்கள் தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதேபோல மலையகத்துக்கான தனி வீட்டுத் திட்டம் ஜனவரி முதல் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்படும் என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

தலவாக்கலை, வட்டகொடையில் அமைந்துள்ள பிரஜாசக்தி நிலையத்தில் தோட்ட வீடமைப்பு மற்றும் சமுதாய உட்கட்டமைப்பு அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் 13 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் தொண்டமான் ஞாபகார்த்த மன்றத்தின் ஊடாக மலையக மக்களின் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்யும் நோக்கில் கூட்டுப்பண்ணை அபிவிருத்தி செயற்திட்டத்திற்கான பயிற்சி நிலையம் அமைப்பதற்கான கட்டட தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் தலைமையில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர், கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாத், உள்ளிட்ட பிரஜாசக்தி பணிப்பாளர் மற்றும் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தொடர்ந்து பேசிய இராஜாங்க அமைச்சர், ஜனவரி மாதம் ஆயிரம் ரூபா வழங்கப்படும் என ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் அறிவித்துள்ளனர். எனவே கிடைக்கும் என நம்புகின்றோம். தற்போதைய சூழ்நிலையால் தான் இழுபறி நிலைமை ஏற்பட்டுள்ளது என்றாலும் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன. ஆயிரம் ரூபாவை விட அதிக சம்பளம் கிடைக்கவேண்டும் என்பதே எமது எதிர்ப்பார்ப்பாகும். அப்படியானால் இந்த கூட்டு ஒப்பந்த முறையில் புதிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும். குறித்த முறையில் குறைப்பாடுகள் உள்ளன என்பதை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர்கூ ட ஏற்றுக் கொண்டுள்ளனர். அது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

ஹற்றன் விசேட நிருபர்

 

 

 

Sat, 12/12/2020 - 08:14


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை