அரசாங்கம் முன்னெடுத்த நடவடிக்கைக்கு பாராட்டு

பேராயர் ரஞ்சித் ஆண்டகை பிரதமருக்கு நன்றி

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்து அவர்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்தமை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட அரசாங்கத்தை பாராட்டுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று 16 தெரிவித்தார்.

2019 உயிர்த்த ஞாயிறு தின பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பிரச்சினைகளை தீர்த்தல் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களின் எதிர்கால அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து பிரதமரின் பங்கேற்புடன் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் நிறைவிலேயே பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் தாக்குதலுக்கு இலக்கான தேவாலயங்களில் காணப்படும் பிரச்சினைகள் அருட்தந்தை லோரன்ஸ் ராமநாயக்கவினால் இச் சந்திப்பின்போது முன்வைக்கப்பட்டது.

கலந்துரையாடலின் நிறைவில் அங்கு கருத்து தெரிவித்த பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை பிரதமரிடம் தெரிவிக்கையில்,

நான் உங்களுக்கும் அரசாங்கத்திற்கும் தனிப்பிட்ட ரீதியில் நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுத்து, அவர்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு முயற்சிக்கும் இந்த வேலைத்திட்டத்திற்கு எமக்கு வழங்கிய ஆதரவு தொடர்பில், விசேடமாக இந்த விடயத்தில் தலையீடு செய்து நடவடிக்கை மேற்கொள்ளும் அமைச்சர்களுக்கும், இராஜாங்க அமை ச்சர்களுக்கும் நான் எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.

எமது மக்கள் பாதிக்கப்பட்டமையினாலேயே நாம் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றோம். எதிர்காலத்தில் அவ்வாறான தாக்குதல்கள் இடம்பெறாத பாதுகாப்பான இடமாக மாற்றுவதற்கு உங்களது அரசாங்கம் மற்றும் ஜனாதிபதியின் தலையீட்டுடன் நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுமென நாம் நம்புகின்றோம். அது குறித்து நாம் பிரதமர் மீது நம்பிக்கை கொண்டுள்ளோம். இவ்வாறானதொரு சந்திப்பை ஏற்பாடு செய்தமை குறித்தும் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் எனக் குறிப்பிட்டார்.

இதில் கொழும்பு உதவி பேராயர் வணக்கத்திற்குரிய ஜே.டீ.அந்தனி ஆண்டகை, வணக்கத்திற்குரிய அருட்தந்தைமார்களான ஃப்ரீலி முத்துகுடஆராச்சி, ஜுட் சமந்த பெர்னாண்டோ, தவடகே கிஹான் றிட்லி டெரன்ஸ் பெரேரா, லியனகே பட்ரின் லலித் பெரேரா மற்றும் அமைச்சர்கள் இராஜாங்க அமைச்சர்கள், அமைச்சுக்களின் செயலாளர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Thu, 12/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை