பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட பைடன் திட்டம்

அமெரிக்காவில் தடுப்பு மருந்தின் பாதுகாப்புக் குறித்துப் பொதுமக்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாகப் பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு ஜோ பைடன் திட்டமிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதிகளான பராக் ஒபாமா, ஜார்ஜ் புஷ், பில் கிளிண்டன் ஆகியோரும் அதேபோன்று பொதுமக்கள் முன்னிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அத்துடன், தாம் பதவியேற்ற முதல் 100 நாட்களுக்கு முகக்கவசம் அணியும்படி அமெரிக்கர்களைக் கேட்டுக்கொள்ளப் போவதாக பைடன் கூறியுள்ளார்.

அரசாங்கக் கட்டடங்களில் அனைவரும் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவிடவிருப்பதாகவும் சி.என்.என் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் அவர் குறிப்பிட்டார்.

கடந்த நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றியீட்டி இருக்கும் ஜோ பைடன் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ளார்.

தமது நிர்வாகத்தின் கொவிட்–19 தொற்று எதிர்ப்புப் பணிக்குழுவிற்குத் தலைமை ஆலோசகராக மருத்துவர் அண்டனி பௌச்சி நீடிப்பார் என்றும் பைடன் கூறினார். கொரோனா தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக இருக்கும் அமெரிக்காவில் 14.1 மில்லியன் நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 276,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

Sat, 12/05/2020 - 15:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை