ஐந்து வருட பொற்காலத்தை தவறவிட்டு விட்டு தமிழ் மக்கள் முன் மீண்டும் நீலிக்கண்ணீர்

- மீண்டும் முருங்கை மரத்தில் ஏற முயலும் வேதாளம்
- மார்ச் மாதம் என்றால் தமிழ் கூட்டமைப்புக்கும் சிலருக்கும் ஒரு கிளுகிளுப்பு

கடந்த ஐந்து வருடங்களாக நல்லாட்சி அரசாங்கத்திற்கு சகல விதங்களிலும் முட்டுக்கொடுத்து ஆட்சி கவிழும் நிலையில் அவர்களை இக்கட்டான சந்தர்ப்பங்கள் பலவற்றில் காப்பாற்றி ஆட்சி தொடர உதவி புரிந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அந்த பொற்காலத்தை தவறவிட்டுவிட்டு இன்று இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது வேடிக்கைக்கும் கவலைக்குமுரிய விடயமாகும் என்று தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்  வி. ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவுக்கு வந்த காலம் முதல் மஹிந்த ராஜபக்ச குடும்பத்தினரையும் அவர்களது அரசாங்கத்தையும் குற்றம்சாட்டுவது மட்டுமே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களது செயற்பாடாக இருந்துவருகிறது. இவர்கள் தமிழ் மக்களை பற்றி ஒருபோதும் சிந்திக்கவில்லை,  அப்படி சிந்தித்திருந்தால் தமக்கு கிடைத்த அரிய சந்தர்ப்பமாக நல்லாட்சி அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வினை கண்டிருக்கலாம். அரசியல் தமிழ் கைதிகளை
விடுவித்து இருக்கலாம், காணாமல் போனோர் பற்றிய விடையத்தை முடிவுக்கு கொண்டு வந்திருக்கலாம். ஜெனிவாவில் ஒரு தீர்வினை கண்டிருக்கலாம். ஆனால் எதுவுமே நடக்கவில்லை. பொதுவாகவே மார்ச் மாதம் வந்தால் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கும் சில தமிழ் கட்சிகளுக்கும் ஒரு கிளுகிளுப்பு வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

ஆனால் இவர்கள் அவ்வப்போது அந்த அரசாங்கத்தின் அற்ப சொற்ப சலுகைகளை பெற்று தமிழ் மக்களை மறந்து விட்டார்கள்.  இன்று மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறியது போல் ஜெனிவா பிரச்சினை, ஒற்றுமை, போர்க்குற்றம் பற்றி பாராளுமன்றத்தில் வாய்கிழிய பேசுகிறார்கள். இவர்கள் தாம் ஆற்றும் உரைகளை பார்த்து அவர்களே சிரித்துக் கொள்ளும் அளவிற்கு நடந்துகொள்கிறார்கள்.
முதலில் அவர்கள் தங்களுக்குள் ஒரு ஒற்றுமைக்கு வந்து தமிழர் பிரச்சினைக்கு இதயசுத்தியுடன் தீர்வு காண முன் வருவார்களேயானால் இன்றைய அரசாங்கத்தில் இந்த இனப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு விடலாம்.

தமிழ் கூட்டமைப்பினரை தலையில் தூக்கி வைத்து ஆடிய ரணில் விக்கிரமசிங்க எங்கே?  மைத்திரிபால சிறிசேன எங்கே?.  எனவே இனியும் தமிழ் மக்களை  ஏமாற்றாது தமிழ் தேசியக் கூட்டமைப்பு உண்மையான இதயசுத்தியுடன் செயற்பட முன்வரவேண்டும். 

இன்று பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்கள் பலரும் தமிழ் தேசிய கூட்டமைப்பை பார்த்து ஐந்து வருடங்கள் நித்திரையில்  இருந்தீர்களா? அல்லது கோமாவில் இருந்தீர்களா ?என்றெல்லாம் கேலி செய்யும் அளவிற்கு தமிழர் அரசியல் கீழே தரம்  இறங்கியுள்ளது எனவும் ஆனந்தசங்கரி கவலையுடன் தெரிவித்தார்.

எஸ். சுரேஷ்

Sun, 12/20/2020 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை