உலகளாவிய கொரோனா நெருக்கடிக்கு மத்தியிலும் பொருளாதாரம் ஸ்திரம்

பட்ஜட் இறுதிநாள் விவாதத்தில்  பிரதமர் மஹிந்த ராஜபக்ச

உலகளாவிய கொவிட் தொற்று நெருக்கடிக்கு மத்தியிலும் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரமாக பேண முடிந்துள்ளதுடன் ரூபாயின் பெறுமதியையும் பேண முடிந்துள்ளது. மதிப்பிடப்பட்ட அரச வருமானத்தை பெற்றுக்கொள்ள முடிந்துள்ளதுடன் சர்வதேச கடன் தவணைகளை செலுத்தி சுபீட்சமான நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க முடிந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டத்தின் இறுதிநாள் விவாதத்தில் அரசாங்கத்தின் சார்பில் இறுதி பதிலளிப்பு உரையை நிகழ்த்திய போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

வரவு – செலவுத் திட்டம் மீது ஆளும், எதிர்க்கட்சிகள் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தன. அந்த கருத்துக்கள் அனைத்தின் மீதும் கவனம் செலுத்தி எடுக்க வேண்டிய தீர்மானங்களை எடுப்பதற்கு தயாராக உள்ளோம்.

2019ஆம் ஆண்டு இறுதியில் கொவிட் தொற்றுக்கு முகங்கொடுப்போமென எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்த வைரஸ் தொற்றுக்கு உலகமும் முகங்கொடுத்தது. எமது நாடும் அதற்கு முகங்கொடுத்தது.

கொவிட் முதலாம் அலையை வெற்றிகரமாக எம்மால் கட்டுப்படுத்த முடிந்தது. கொவிட் பரவலின் இரண்டாம் அலையை கட்டுப்படுத்த பாரிய நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டிருக்கின்றோம். இன்றும் அது தொடர்பிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றிருந்தன.

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள குடும்பங்களுக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை 10 ஆயிரம் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

அதனை நீடிக்கவும் நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். அதற்கு அப்பால் தனிமைப்படுத்தல் சட்டத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்கு 5000 ரூபா வீதம் கொடுத்துள்ளோம். கம்பஹா மாவட்டத்தில் இரண்டு முறை 5000 ரூபா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. எதிர்காலத்திலும் வழங்கப்படும்.

வரவு- செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் தருணம் வரை கொவிட் தொற்றை கட்டுப்படுத்த 70 பில்லியனை செலவழித்துள்ளோம். வரவு- செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு இடம்பெறும் இத்தருணம் வரை 82 பில்லியனை செலவழித்துள்ளோம். டிசம்பர் மாதம் முடிவடையும் போது அது 90 பில்லியன் வரை செல்லும். இவ்வாறு பாரிய சவால்களுக்குதான் நாம் முகங்கொடுத்துள்ளோம். நாம் உலகத்துடன் எவ்வளவு தூரம் பின்னிப்பிணைந்துள்ளோம் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு சிறந்த சந்தர்ப்பம் தான் இந்தச் சந்தர்ப்பம்.

உலகில் இடம்பெறும் செயல்கள் பாராளுமன்றத்திலும் தாக்கம் செலுத்துகிறது. இந்த உலக நெருக்கடியான சூழலில் உலகத்துடன் மோதல் போக்கை கடைப்பிடிக்கும் நாடுகளுக்கு பாரிய சிரமங்களை எதிர்க்கொள்ள நேரிடும். நாம் எமது நாட்டின் பொருளாதாரத்தை தேசிய ரீதியில் பலப்படுத்தியிருந்தால் இத்தகைய நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க முடியும். கொவிட் தொற்று எமக்கு கற்பித்துள்ள பாடம் இதுதான். ஆரம்பத்திலேயே இந்த நிலைமையை அறிந்துக் கொண்டு நடவடிக்கைகளை எடுத்திருந்தோம். அதனால்தான் ‘சுபீட்சமான நோக்கு” திட்டத்தில் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கான முன்மொழிவுகளை வழங்கியிருந்தோம்.

வேறு வரவு – செலவுத்திட்டங்களில் உள்ள எதிர்பார்ப்புகள் அல்ல இந்த வரவு – செலவுத் திட்டத்தில் உள்ளது. கடந்த வரவு – செலவுத் திட்டங்களில் பற்றாக்குறையை பூர்த்தி செய்துக் கொள்வதற்கே முன்னுரிமையளிக்கப்பட்டிருந்தன. ஆனால் இந்த வரவு – செலவுத் திட்டத்தில் தேசிய பொருளாதாரம், தேசிய உற்பத்தி, தேசிய விவசாயிகளை கட்டியெழுப்பும் உலகத்திற்கு முகங்கொடுக்க கூடிய மற்றும் இவ்வாறான நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க கூடிய நாட்டை உருவாக்குவதற்கே முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. சுபீட்சமான நோக்கு திட்டத்தில் விவசாயம் மற்றும் உணவில் தன்னிறைவடைந்த நாட்டை உருவாக்குவது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. எமது நாட்டை கட்டியெழுப்புவதற்கு சிறந்த உபாயமார்கமாக இதுவே காணப்படுகிறது.

இதுவரை காலமும் நெல் ஒரு கிலோவுக்கு 32 ரூபாதான் வழங்கப்பட்டது. அதனை 50 ரூபாவாக உயர்த்தினோம். உரங்களை இலவசமாக பெற்றுக்கொடுத்தோம். இதனால் விவசாயிகளின் வருமானம் உயர்வடைந்தது. இந்த வரவு – செலவுத்திட்டத்தில் பொது மக்களுக்கு எவ்வித சலுகைகளும் வழங்கப்படவில்லையென எம்மை விமர்சித்தனர். ஆனால் நாம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெறுமனே பணத்தை மாத்திரம் பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டங்களை ஆரம்பிக்கவில்லை. எதிர்வரும் தேர்தலை இலக்குவைத்து எதனையும் அறிவிக்கவில்லை. அவ்வாறான விம்பத்தை மக்கள் மத்தியில் நாம் உருவாக்கவும் இல்லை.

வரவு – செலவுத்திட்டத்தில் 350 பில்லியன் நெடுஞ்சாலைகள் அபிவிருத்திக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எட்வர் பான்ஸ் ஆளுனரின் பின்னர் பாரிய அளவிலான வீதி அபிவிருத்தி புரட்சி நடைபெறுவது எமது காலத்தில்தான் என்பதை பெருமையுடன் கூறுகின்றோம். வெளிநாட்டவர் ஒருவரின் பெயரை கூறி இதனை வெளிப்படுத்துவதையிட்டு கவலையடைகிறேன். அபிவிருத்தி செய்யப்படும் அனைத்து பாதைகள் மூலமும் நாட்டின் பொது மக்களே பயனடைவர்.

கிராமிய மக்கள் மிகவும் மோசமான பாதைகள் ஊடாகதான் நகரங்களுக்கு வருகின்றனர்.

நாம் செலவழிக்கும் 350 பில்லியனும் பொது மக்களின் பையிக்குள் போடப்பட்ட பணமாகும். குடிநீர் வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்க 135 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள் குடிநீர் வசதிகள் இல்லாத அனைவருக்கும் குடிநீர் வசதியை ஏற்படுத்திக் கொடுப்பதற்காகவே இந்த நிதியை ஒதுக்கியுள்ளோம். இதற்கு அப்பால் 2000 பில்லியனுக்கான வேலைத்திட்டங்கள் நாட்டில் நடைபெறவுள்ளன.

600 மெகாவேல்ட் புதுபிக்கத்தக்க சக்தி நிலையமொன்றை அமைத்தலும் இத்திட்டங்களில் அடங்கும். கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் துறைமுகத்தை விரிவாக்க நிதியை பயன்படுத்த உள்ளோம். இவை அனைத்தும் பொது மக்களுக்குதான் கிடைக்கப்பெறும். அதுமாத்திரம் அல்ல கடந்த காலத்தில் நாட்டில் பாரிய மறுசீரமைப்புகளை மேற்கொண்டுள்ளோம்.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதியானது நாட்டின் அனைத்து பொது மக்களுக்கும் பயன்படுத்தப்படும். இராஜாங்க அமைச்சுகளுக்கு ஒதுக்கப்படும் நிதிக்கான பொறுப்புக்கூறலுக்கு செயலாளர்களும் கணக்காளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் அரசாங்கத்தின் கொள்கைகளை மிகவும் பயனுடைய விதத்தில் நடைமுறைப்படுத்த போதிய சந்தர்ப்பங்கள் கிடைக்கும். தற்போது உள்ள சட்டங்கள் காலம் கடந்தவையாகும். அவை மீள் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றன.

ஆயிரக்கணக்கான வழக்குகள் விசாரணை செய்யாது நீதிமன்றங்களில் குவிந்துக்கிடப்பதாக நீதி அமைச்சர் கூறியிருந்தார். அதற்காக 20 நீதியரசர்கள் நியமித்து வழக்கு விசாரணைகளுக்கான சந்தர்ப்பத்தை அதிகரித்துள்ளோம். நீதியானது சரியான நேரத்தில் நிலைநாட்டப்படாவிட்டால் மக்களுக்கு அநீதியே ஏற்படும். அதனால் நீதிமன்றங்களின் நிர்வாகத்திற்கு புதிய தொழில்நுட்பங்களை உள்வாங்கி அவற்றின் செயற்றிறனை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். நீதிமன்ற கட்டங்களும் துரிதமாக மறுசீரமைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பொது மக்களுக்கு சொந்தமானதாகும்.

வரி குறைக்கப்படுவதால் அரச வருமானம் குறைவடையுமென கூறியிருந்தனர். அதிகமான வரி சுமைகள் சுமத்தப்படுவதால் தேசிய வியாபாரிகளும் உற்பத்தியாளர்களுமே பாதிக்கப்பட்டிருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் நிதி அமைச்சர் ‘ராஜபக்ஷர் வரி’ என்ற வரியையும் விதித்திருந்தனர். நல்லாட்சி அரசாங்கத்தின் வரி கொள்கையால் கைத்தொழிலாளர்களும் வியாபாரிகளும் நிர்க்கதியாகியிருந்தனர். அதிகளவான வர்த்தகங்கள் வீழ்ச்சிக்கண்டிருந்தன. சிறிய மற்றும் நடுத்தர வர்த்தகங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தன. அதனால் நாம் வரியை குறைத்திருந்தோம். அரசாங்கம் வரியை பெற்றுக்கொள்ள வர்த்தங்கள் வெற்றிகரமாக இயங்க வேண்டும். வரி குறைப்பால் அரச வருமானம் வீழ்ச்சியடைவில்லை.

2020ஆம் ஆண்டின் கணக்கிடப்பட்ட அரச வருமானத்தில் 75 சதவீதத்தை முதல் 10 மாதங்களில் பெற்றுக்கொள்ள முடிந்தது. கொவிட் தொற்றுக் காரணமான ஏற்றுமதிகள் குறைவடைந்திருந்த போதிலும் அரச வருமானம் 1200 பில்லியன் வரை பெறப்பட்டுள்ளது. சிக்கலான வரிக் கொள்கைகளுக்கு பதிலாக எளிய வரிக் கொள்கைகளை அறிமுகப்படுத்தினோம். நாட்டை கட்டியெழுப்பும் வரி உட்பட பல வரிகளை நாம் முற்றாக நீக்கியிருந்தோம். சிகரட், மதுபானம், சூதாட்டம், வாகனங்கள் என பலவிடயங்களுக்கு தனி தனியாக இருந்த வரி முறைகளுக்கு பதிலாக பொருட்கள் மற்றும் சேவைகள் என்ற தனியார் வரி முறைமையை அறிமுகப்படுத்திருந்தோம். ஒன்லைன் மூலம் வரிகளை செலுத்த நடவடிக்கைகள எடுத்துள்ளோம்.

அரச வருமானத்தை அதிகரிப்பதற்காக வழிமுறைகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்திருந்த போது கடன் தவனைகளை செலுத்துவது தொடர்பில் பல கருத்துகளை வெளியிட்டிருந்தனர். கடன் தவணைகளை எம்மால் செலுத்த முடியாதென பெரும் எதிர்பார்ப்புடன் கூறியிருந்தனர். என்றாலும் ஒக்டோபர் 02ஆம் திகதி நாம் செலுத்த வேண்டியிருந்த டொலர் பில்லியன்களை செலுத்திருந்தோம். கடன் தவணைகள் செலுத்தப்பட்ட பின்னர் அது தொடர்பில் எவரும் பேசவில்லை. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் செலுத்தப்படாதிருந்த பல கடன் அறிக்கைகளையும் நாம் செலுத்திருந்தோம். வெளிநாட்டு கடன்களுக்கு பதிலாக தேசிய கடன்கள் குறித்து அவதானம் செலுத்தியுள்ளோம். எமது சிறந்த பொருளாதார முகாமைத்துவத்தின் காரணமாகத்தான் இந்தக் கடனை எம்மால் செலுத்த முடிந்தது.

வரி கொள்கையின் ஸ்திரத்தன்மையால் முதலீட்டாளர்களின் நம்பிக்கை அதிகரித்துள்ளது. 2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நாம் அறிமுக்கப்படுத்தியிருந்த வரிக்கொள்கை மிகவும் அவசியம் என்பதை கொவிட் தொற்று நெருக்கடி உணர்த்தியிருந்தது. 2025ஆம் ஆண்டாகும் போது வரவு – செலவுத் திட்டப் பற்றாக்குறையை தேசிய வருமானத்தில் 4.0 சதவீதமாக குறைப்பதே சுபீட்சமான நோக்கு என்ற ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் நோக்கமாகும். இதுதான் எமது இலக்கும்.

வரவு – செலவுத் திட்ட விவாத்தில் கலந்துகொண்டு கருத்துகளை வெளியிட்ட ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிப்பதுடன் அனைவரினதும் கருத்துக்கள் மீது அவதானம் செலுத்தப்படும் என்றார்.

 

 

சம்ஷ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 12/11/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை