நிலவின் பாறை மாதிரிகளுடன் சீன விண்கலம் பூமிக்கு வந்தது

நிலவில் உள்ள பாறை மாதிரிகளைச் சேகரிக்கச் சென்ற ஆளில்லா சீன விண்கலம் கடந்த புதன்கிழமை அதிகாலையில் பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளது.

அந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவிலிருந்து மண்ணையும் கற்களையும் எடுத்து வந்துள்ளதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சாங்கே 5 என்ற அந்த விண்கலம், சீனாவின் வடபகுதியைச் சேர்ந்த உள் மங்கோலிய வட்டாரத்தில் தரையிறங்கியது. விண்கலப் பயணம் வெற்றியடைந்துள்ளதாக சீனா தெரிவித்தது.

நிலவிலிருந்து மாதிரிகளை எடுத்து வந்துள்ள மூன்றாவது நாடு சீனாவாகும். இதற்கு முன்னர், அமெரிக்காவும் முன்னாள் சோவியத் ஒன்றியமும் அவ்வாறு நிலவிலிருந்து மண், பாறை மாதிரிகளை பூமிக்குக் கொண்டுவந்து ஆய்வில் ஈடுபட்டன. சீன விண்கலத்தில் சுமார் இரண்டு கிலோகிராம் பாறை மாதிரிகள் உள்ளன. அவை, பெய்ச்சிங்கில் உள்ள ஆய்வுக் கூடத்தில் வைத்து ஆராயப்படவுள்ளன.

விண்ணில் ஆய்வு நிலையத்தை 2022ஆம் ஆண்டுக்குள் அமைக்கவும் சீனா திட்டமிட்டுள்ளது. மனிதர்களை நிலவிற்கு அனுப்பி வைக்கவும் சீனா உறுதியோடு உள்ளது.  

மறுபுறம் 2024 ஆம் ஆண்டில் அமெரிக்காவும் நிலவுக்குத் தன் விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்கு முன் நிலவில் இயந்திரங்களைக் களமிறக்க உள்ளது அமெரிக்கா.

நிலவு ஒரு போட்டிக் களமாக மீண்டும் மாறி வருவதையே இது காட்டுவதாக உள்ளது.

Fri, 12/18/2020 - 13:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை