அரச காணியை வெளியாட்களுக்கு வழங்குவதாக கூறி போராட்டம்

நல்லதண்ணி பிரதேச மக்கள்  ஒன்றுதிரண்டு வீதியில் மறியல்

அரசாங்கத்திற்கு சொந்தமான நிலப்பரப்பை நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகள் வெளியாட்களுக்கு ஒப்படைத்ததாக கூறி நல்லதண்ணி ரிகாடன் பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மஸ்கெலியா நல்லதண்ணி பிரதான வீதியில் ரிகாடன் பகுதியிலேயே நேற்று முன்தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. பதாதைகளை ஏந்தியவாறும், கோஷங்களை எழுப்பியவாறும் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

நல்லதண்ணி ரிகாடன் பகுதியில் உள்ள நிலப்பரப்பில் இரண்டரை ஏக்கர் கொண்ட காணியை கினிகத்தேனை பிரதேசத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகள் வழங்கியுள்ளதாகவும், அதற்கான ஆவணங்கள் அவரிடம் இருப்பதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

பல வருட காலமாக இப்பகுதியில் வசிக்கும் தங்களுக்கு ஒரு சிறு துண்டு நிலம் கூட வழங்கப்படவில்லை எனவும், எனினும், வெளியாட்களுக்கு இந்த காணியை கொடுத்துள்ளதாகவும் அவர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் நில சீர்திருத்த ஆணையகத்தின் அதிகாரிகளிடம் வினவிய போது,

நாங்கள் குறித்த இடத்தினை மேற்படி நபருக்கு வழங்கவில்லை. ஆவணங்களும் தயாரித்துக் கொடுக்கவில்லை. இது எவ்வாறு நடந்தது என்று தெரியவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து பார்க்கின்றோம் என தெரிவித்தனர்.

 

 

Fri, 12/25/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை