பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக சலீம் நியமனம்

பொதுசேவை ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக சட்டம் ஒழுங்கு மற்றும் தென் பிராந்திய அமைச்சு, கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு என்பவற்றின் முன்னாள் மேலதிக செயலாளரும், அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பிரதிபணிப்பாளரும், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமுமான ஏ.எல்.எம். சலீம் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதி மேற்கொண்டுள்ள நியமனங்களுக்கு பாராளுமன்ற பேரவை ஒப்புதலும் அளித்துள்ளது. ஒய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் ஜகத் பாலபட்டபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்தஆணைக்குழுவில் இடம்பெற்றுள்ள ஏ.எல்.எம். சலீம் பேராதனை மற்றும் • ஜயவர்தனபுர பல்கலைக்கழகங்களில் கற்று முதுமானி பட்டங்கள் பெற்றவராவார். அத்தோடு இலங்கை கல்வி நிருவாக சேவை அதிகாரியாகவும் மற்றும் இலங்கை நிருவாக சேவை அதிகாரியாகவும் கடமையாற்றி அரச சேவையில் 35 வருட கால
அனுபவத்தைப் பெற்றவராவார்.

சாய்ந்தமருது கமு/அல்-ஜலால், மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை கற்று, அதன்பின் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றார். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்றார்.

அதன்பின் ஸாஹிறாக் கல்லூரிக்கு இடமாற்றம் பெற்று ஆசிரியராகக் கடமையாற்றினார்.

இதன் போது இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் சித்தியடைந்ததைத் தொடர்ந்து பிரதியதிபராக அதேபாடசாலையில் பதவியுயர்வு பெற்றார்.

இதே காலத்தில் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தி நிருவாக சேவையில் இணைந்து 1996 இல் திருகோணமலையில் உதவி காணி ஆணையாளராக நியமனம் பெற்றார். இப்பிரதேச வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் இலங்கை நிருவாக சேவை இரண்டிலும் சித்தியெய்திய ஒரேயொரு நபராக இவர் விளங்குகிறார்.

அதே ஆண்டில் குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் தலைமையகத்தில் உதவிக் கட்டுப்பாட்டாளராக நியமனம் பெற்று கடமையாற்றிக் கொண்டிருந்த இவர், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முதல் செயலாளராக நியமனம் பெற்று சிறிது காலம் கடமையாற்றினார். அதன் பின்னர் விஞ்ஞான தொழிநுட்ப அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றிய இவர், ஜனாபதி செயலகத்திலும் இணைக்கப்பட்டு சேவையைத் தொடர்ந்தார். அத்தோடு ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் பதில் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

அத்தோடு 2007 முதல் 2016 வரை சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர், இதே காலப்பகுதியில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு பல்வேறு உயர் பதவிகளை வகித்து நாட்டுக்கும் பிரதேசத்திற்கும் மக்களுக்கும் இன, மத பேதம் பாராது அளப்பரிய சேவையாற்றியுள்ள ஏ.எல்.எம். சலீம் இலங்கை அரச சேவையில் பரந்த அனுபவம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Wed, 12/16/2020 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை