கொரோனா அபாய வலயமாக கொழும்பு

சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

கடந்த ஒரு வாரமாக கொழும்பில் இனங்காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருவதனால் குறித்த பகுதி அபாயமுடையது என சுகாதார தரப்பினரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கொழும்பில் இரண்டாம் அலையின் பின்னர் நேற்று காலை வரை 10,884 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கொழும்பு 1 தொடக்கம் 15 வரையான பகுதிகளிலும், வெலிக்கட, அங்கொடை, அத்திட்டிய, பொரல்லஸ்கமுவ,தெஹிவளை, கொத்தொட்டுவ, மடபத்த, புவக்பிட்டிய, ராஜகிரிய மற்றும் தலவத்துகொட ஆகிய பகுதிகளில் இவ்வாறு தொடர்ந்தும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக கொவிட் தடுப்பிற்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 27,000 ஐ கடந்துள்ள போதிலும் 20,000 இற்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

எனினும் இரண்டாம் அலை உருவானதன் பின்னர் அபாயமுடைய பிரதேசமாகக் காணப்பட்ட கம்பஹாவில் தொற்றாளர்கள் எண்ணிக்கை குறைவடைந்திருந்தாலும், கொழும்பில் அதனை விட அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றனர்.

இவ்வாறு நேற்று 669 புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் அவர்களில் 487 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். ஏனைய 182 பேரும் சிறைச்சாலைகள் கொத்தணியுடன் தொடர்புடையவர்களாவர். அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 27, 228 ஆக உயர்வடைந்துள்ளது.

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/07/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை