யுரேனிய செறிவூட்டலை அதிகரித்து ஐ.நா. கண்காணிப்பாளரை தடுக்க ஈரான் சட்டம்

ஈரானின் அணு நிலையங்களில் ஐ.நா கண்காணிப்பை தடுப்பதற்கும் யுரேனிய செறிவூட்டலை முன்னெடுப்பதற்கும் புதிய சட்டம் ஒன்றின் கீழ் அந்நாட்டு பாராளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

பொருளாதாரத் தடைகள் இரண்டு மாதங்களுக்குள் தளர்த்தப்படாவிட்டால், 2015 அணு ஒப்பந்தத்தின் கீழ் இணங்கிய 3.67 வீதத்திற்கு மேல் யுரேனிய செறிவூட்டலை 20 வீதத்திற்கு அரசு மேற்கொள்ள இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குறைந்த அளவு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மின் உற்பத்திக்கு பயன்படுத்த முடியும் என்பதோடு அணு ஆயுதம் தயாரிப்பதற்கு யுரேனியத்தை அதிகம் செறிவூட்ட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

ஈரான் அணு விஞ்ஞானி கொல்லப்பட்டதை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மர்மத் தாக்குதல் ஒன்றில் முன்னணி அணு விஞ்ஞானி மொஹ்சன் பக்ரிசதஹ் கொல்லப்பட்டார். இஸ்ரேல் மற்றும் நாட்டில் இருந்து வெளியில் இருக்கும் எதிர்ப்பாளர்கள் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் ஆயுதங்களைக் கொண்டு இந்தத் தாக்குதலை நடத்தியதாக ஈரான் குறிப்பிடுகிறது.

இதில் உள்ள தொடர்புபற்றி சுமத்தப்படும் குற்றச்சாட்டு குறித்து இஸ்ரேல் பொதுவெளியில் எந்த பதிலும் அளிக்கவில்லை. ஈரான் அணு செயற்பாட்டில் பக்ரிசதஹ் தீர்க்கமான பங்கு வகித்தார் என்று நம்பப்படும் நிலையில், தமது அணு செயற்பாடுகளும் அமைதியானது என்று ஈரான் அரசு கூறி வருகிறது.

இந்த புதிய சட்டத்தில் ஈரானின் பொறுப்பாளர் கௌன்சில், தடைகளை தளர்த்துவதற்கு 2015 அணு உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட நாடுகளுக்கு இரண்டு மாதங்கள் கெடு விதித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2018இல் அமெரிக்கா விலகியதை அடுத்து ஈரான் எண்ணெய் மற்றும் நிதித் துறைகள் மீது தடை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்தக் காலக்கெடுவுக்குள் தடைகள் தளர்த்தப்படாவிட்டால் அரசு யுரேனிய செறிவூட்டலை 20 வீதம் அதிகரிப்பதோடு அந்த செறிவூட்டலுக்கு பயன்படுத்தும் மேம்பட்ட மைய நீக்கிகளை நடான்ஸ் மற்றும் போர்டொவ் அணு நிலையங்களில் நிறுவும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தளங்களை அணுகுவதில் இருந்து ஐ.நா கண்காணிப்பளர்களை தடுப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘இந்த புதிய சட்டத்தை அமுல்படுத்துவதற்கு இன்று ஜனாதிபதியை பாராளுமன்றம் உத்தியோகபூர்வமாக கேட்டுக்கொண்டது’ என்று ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் கடந்த புதன்கிழமை தெரிவித்தது.

எனினும் இந்த சட்டத்திற்கு தமது அரசு இணங்கவில்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி ரூஹானி, இது இராஜதந்திர செயற்பாடுகளை பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Fri, 12/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை