Header Ads

தொலை இயக்க தொழில்நுட்பம் மூலம் ஈரானின் அணு விஞ்ஞானி படுகொலை

ஈரான் அதிகாரிகள் புது விளக்கம்

இஸ்ரேலிய கொலையாளிகள் தொலை இயக்க தொழில்நுட்பத்தை பயன்படுத்தியே ஈரான் அணு விஞ்ஞானி மொஹ்சன் பக்ரிசதஹ்வை படுகொலை செய்திருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது.

‘துரதிருஷ்டவசமாக இந்தத் தாக்குதல் திட்டம் சிக்கல் கொண்டதாக இருப்பதோடு மின் உபகரணங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் சம்பவ இடத்தில் யாரும் இருக்கவில்லை’ என்று ஈரான் உயர் பாதுகாப்பு கௌன்சிலின் செயலாளர் அலி ஷம்கானி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பக்ரிசதஹ்வின் இறுதிச் சடங்கின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

இந்தத் தாக்குதலின் பின்னணியில் இஸ்ரேல் மற்றும் அதன் தேசிய உளவு நிறுவனமான மொசத் இருப்பது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று ஷம்கானி கூறினார்.

கடந்த 20 ஆண்டுகளாக பக்ரிசதஹ்வை கொல்ல இஸ்ரேல் முயன்று வந்ததாக அந்த அதிகாரி தெரிவித்தார். ‘இறுதியில் இந்த முறை எதிரிகள் முழுமையாக தொழில்முறை கொண்ட, சிக்கலான, புதிய முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்’ என்றார்.

இந்தத் தாக்குதலில் வெளிநாட்டைத் தளமாகக் கொண்ட ஈரானில் ஆட்சி மாற்றம் ஒன்றுக்கு முயலும் முஜாஹிதீனே கல்க் என்ற குழுவும் பங்கேற்றிருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் அது எவ்வாறு என்று அவர் விளக்கவில்லை.

இந்தக் குழுவை ஒரு தீவிரவாத அமைப்பாக ஈரான் கருதுவதோடு இதன் அங்கத்தவர்களுக்கு பல ஐரோப்பிய நாடுகளும் அடைக்கலம் வழங்குவதாக குற்றம்சாட்டுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்கு அருகில் பட்டப்பகலில் தானியக்க துப்பாக்கிச்சூடு மற்றும் குண்டு தாக்குதல் மூலம் முன்னணி அணு விஞ்ஞானியான பக்ரிசதஹ் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த படுகொலை தொடர்பில் ஈரான் ஆரம்பத்தில் கூறிய விளக்கத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக தற்போதைய விளக்கம் உள்ளது. ஆரம்பித்தல் பக்ரிசதஹ்வின் கார் மீது துப்பாக்கிதாரிகள் சரமாரி தாக்குதல் நடத்தியதாக கூறப்பட்டிருந்தது.

இந்தக் கொலைக்கு பழிதீர்க்கப்படும் என்று ஈரான் உறுதியாகக் கூறியுள்ளது.

பக்ரிசதஹ்வை கொன்றவர்களை பழி தீர்ப்பதில் தீர்மானமாக இருக்கிறோம் என ஈரானின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜெனரல் அமிர் ஹடாமி, பக்ரிசதஹ்வின் அஞ்சலிக் கூட்டத்தில் கூறினார்.

எந்த ஒரு குற்றத்துக்கும், தீவிரவாத நடவடிக்கைகளுக்கும், முட்டாள் தனமான செயல்பாடுகளுக்கும் ஈரான் மக்கள் விடை கொடுக்காமல் இருக்கமாட்டார்கள். இது எதிரிகளுக்கும் தெரியும். நான் ஒரு இராணுவ வீரனாக இதைக் கூறுகிறேன் என்றார் ஹடாமி.

ஈரானின் பாதுகாப்புத் துறையின் புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் தலைவராக இருந்த பக்ரிசதஹ், அணு சக்தி பாதுகாப்பில், பிரமாதமான பணிகளைச் செய்து இருக்கிறார். மொஹ்சன் பக்ரிசதஹ்வின் பாதையை இன்னும் வேகமாகவும், இன்னும் பலமாகவும் தொடர, இந்த அமைப்புக்கு ஈரான் அரசு கொடுக்கும் பணத்தை இரண்டு மடங்கு அதிகரிக்கும் எனவும் ஜெனரல் ஹடாமி குறிப்பிட்டார்.

Wed, 12/02/2020 - 15:08


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.