உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ஆணைக்குழுவுக்கு மேலும் ஒரு மாதம்-The term of the PCI on the Easter Sunday Attack Extended Till Jan 31

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக்காலம் இம்மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில் அதன் பதவிக்காலம் மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக அதி விசேட வர்த்தமானி மூலம் ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2019 ஏப்ரல் 21 இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்து, அறிக்கையிடுதல் அல்லது தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு கடந்த வருடம் செப்டெம்பர் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த ஆணைக்குழுவின் பதவிக் காலம் இவ்வருடம் மார்ச் 20ஆம் திகதி நிறைவடையவிருந்த நிலையில், அதனை மேலும் 6 மாத காலத்தினால் இவ்வருடம் செப்டெம்பர் 04ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டதோடு, அது பின்னர் மீண்டும் மேலும் 3 மாதங்கள் நீடிக்கப்பட்டு இம்மாதம் 20ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது மேலும் ஒரு மாதத்திற்கு ஜனவரி 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாணைக்குழுவிற்கு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஜானக்க டி சில்வா  தலைவராகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன, ஓய்வுபெற்ற மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் நிஹால் சுனில் ராஜபக்ஷ, ஓய்வுபெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி பந்துல குமார அத்தபத்து மற்றும் நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் டபிள்யு.எம்.எம். அதிகாரி ஆகியோர் இக்குழுவின் ஏனைய உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

Tue, 12/22/2020 - 18:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை