அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட அரவிந்தனுக்கு தடை

- TULF செயலாளர் ஆனந்த சங்கரி அதிரடி

தமிழர் விடுதலைக் கூட்டணி கட்சியின் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரவிந்தனுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சமீப காலமாக எமது கட்சி உறுப்பினர் ச.அரவிந்தன் தலைமைக்கு எதிராகவும், கட்சியின் கட்டுப்பாடுகளையும், ஒழுங்கு விதிகளையும் மீறியும் செயற்பட்டு ஊடகங்களுக்கு கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். இது சம்பந்தமாக கடந்த 17.10.2020ஆம் திகதி அவரிடம் 15 நாட்கள் கால அவகாசத்துடன் விளக்கம் கோரி கடிதம் அனுப்பினோம். கொரோனா காலம் என்பதால் நாமும் ஒன்றரை மாதம் பொறுமையை கடைப்பிடித்தோம்.

மேற்படி கடிதத்திற்கான விளக்கத்தினை அவர் அனுப்பாமல் தொடர்ந்தும் தன்னிச்சையாக ஊடகங்களுக்கு சிரேஷ்ட உபதலைவர் என்ற பதவிப் பெயரைப் பயன்படுத்தி அவரது கருத்துக்களை தெரிவித்து வருகின்றார்.

சிரேஷ்ட உபதலைவர் என்ற பதவி அவருக்கு வழங்கவில்லை என்பதை, அடிக்கடி அறிவுறுத்தியும் அதனை செவிமடுக்காமல் தொடர்ந்தும் அந்த பதவிப் பெயரையும் பயன்படுத்தி, ஊடகங்களில் கருத்துக்களை வெளியிடுகின்றார்.

விரைவில் கட்சியின் மத்திய செயற்குழுவைக் கூட்டி, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்காக ஒழுங்கு நடவடிக்கை குழுவை அமைத்து அவர் மீது விசாரனை மேற்கொண்டு தீர்மானம் எடுக்கும் வரை அவர் தொடர்ந்து கட்சி நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் இடைக்காலத் தடை விதிக்கப்படுகின்றது.

ஒழுங்கு நடவடிக்கை குழுவின் முடிவு தெரியும் வரை அரவிந்தன் கட்சி சம்பந்தமாக எதுவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தி அவருக்கு கடிதமும் அனுப்பப்பட்டுள்ளது. கட்சி உறுப்பினர்கள் எவரேனும் அவருடன் கட்சி சம்பந்தமாக நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sat, 12/12/2020 - 16:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை