இந்திய இராணுவ தளபதி ஐ.அ.இ., சவூதிக்கு விஜயம்

சவூதி அரேபியாவுக்கு வரலாற்று விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய இராணுவத் தளபதி எம்.எம். நராவனே, இருநாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது மற்றும் பொது நலன்கள் பற்றி அந்நாட்டு ஜெனரல்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியம் உட்பட இரு நாட்டு விஜயத்தை மேற்கொண்டு இரண்டாவது கட்டமாகவே இந்திய இராணுவத் தளபதி சவூதி சென்றடைந்தார். மூலோபாய முக்கியம் வாய்ந்த இரு வளைகுடா நாடுகளுக்கு இந்திய இராணுவத் தளபதி விஜயம் மேற்கொள்வது இது முதல் முறையாகும்.

‘சவூதி அரச தரைப்படைகளின் தளபதி ஜெனரல் பஹ்த் பின் அப்துல்லாஹ் முஹமது அல் முதிர் உடன் இருதரப்பு பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பிலான விவகாரம் குறித்து இராணுவத் தளபதி பேச்சுவார்த்தை நடத்தினார்’ என்று இந்திய இராணுவத்தின் பொதுத் தகவல்களுக்கான மேலதிக பணியகம் தெரிவித்தது. சவூதி அரச தரைப்படை தலைமையகத்தில் அவருக்கு இராணுவ மரியாதை வழங்கப்பட்டது. சவூதி இராணுவத் தலைமை அதிகாரி ஜெனரல் பையாத் பின் ஹமித் அல் ருவைலி தமது அலுவலகத்தில் ஜெனரால் நராவனேவை கடந்த ஞாயிற்று க்கிழமை வரவேற்றார்.

முன்னதாக ஐக்கிய அரபு அரசு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜெனரல் நராவனே இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நலன்கள் பற்றி அந்நாட்டு தரைப்படை தளபதி மேஜர் ஜெனரல் சலேஹ் முஹமது சலேஹ் அல் அமெரி உடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த இரு நாடுகளுடனும் இந்தியாவின் மூலோபாய நட்பு பலம்பெற்று வருவதை இராணுவத் தளபதியின் விஜயம் காட்டுவதாக உள்ளது. இது பாதுகாப்பு விவகாரங்களில் புதிய ஒத்துழைப்பு ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய ஆண்டுகளில் சவூதி மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்திய இராணுவத் தளபதி மூன்று நாள் விஜயமாக நேபாளம் சென்றமை குறிப்பிடத்தக்க இராஜதந்திர முன்னேற்றமாக உள்ளது. கடந்த ஓக்டோபரில் இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹார்ஷ் வர்தாவுடன் ஜெனரல் நராவனே மியன்மார் விஜயம் மேற்கொண்டிருந்தார். மியன்மாருடன் இராணு வம் மற்றும் பாதுகாப்பு உடன்படிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அந்நாட்டு தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்றை வழங்க இதன்போது இந்தியா தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/16/2020 - 10:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை