அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் நடக்குமென நம்பிக்கை

1400 நாட்களாக தொடரும் சுழற்சி உண்ணாவிரதம்

நேற்றைய கவனயீர்ப்பு போராட்டத்தில் உறவுகள் தெரிவிப்பு

அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போவதாக அறிகிறோமென வவுனியாவில் தொடர் போராட்டம் மேற்கொள்ளும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் நேற்றுத் தெரிவித்தனர்.

கடந்த 1400 நாட்களாக வவுனியாவில் சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் மேற்கொண்டுவரும் இந்த உறவுகள் நேற்று அடையாள கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்தவிருந்தனர். அதற்கு வவுனியா நீதிமன்றம் தடைவிதித்திருந்தது.

இந்நிலையில் நேற்றும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

ஆகஸ்ட் 2020 தேர்தலுக்கு பின்னர், பல்வேறு தமிழ் கட்சிகளுக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அவர்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறிவிட்டனர். அவர்களால் முன்மொழியப்பட்ட தங்கள் சொந்தக் கொள்கையை அவர்கள் தொடர்ந்து புறக்கணித்தால், தமிழர்கள் ஒரு புதிய அரசியல் கட்சியை கண்டுபிடிக்க நிர்ப்பந்திக்கப்படுவார்கள்.

இதேவேளை அரசியல் கைதிகள் விடுவிக்கப்படப்போகிறார்கள் என்ற செய்தியே எமக்கு கிடைத்திருக்கிறது.

எமது போராட்டத்தில் ஈடுபடும் சில தாய்மாரின் பிள்ளைகளும் விடுவிக்கப்படவுள்ளதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. அரசுடன் இணைந்து செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளின் நடவடிக்கைகள் அதனை உறுதிப்படுத்தியுள்ளன. ஜெனிவா கூட்டத்தொடரும் உள்ளமையால் தெற்கில் அந்த விடயம் சலசலப்பை ஏற்ப்படுத்தாத வகையில் மெதுவாக அவர்களது விடுதலை அமையுமென அறிகிறோம்.

தாய்மாரின் போராட்டம் 1400 நாட்களை எட்டுகிறது. எங்கள் ஜனநாயக போராட்டத்துக்கு உலகத்தின் பார்வை உள்ளது.

இந்த நாளில், நாங்கள் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியாவின் உதவியை தொடர்ந்து நாடுகிறோம் . காணாமல் ஆக்கப்பட்ட நமது தமிழர் பிரச்சினை, தமிழ் இனத்தின் வாழ்வுரிமைக்கான பிரச்சினை. இதனை தீர்க்க இந்த 3 நாடுகள் மட்டுமே எங்களுக்கு உதவ முடியும் என்றனர்.

 

ஓமந்தை விஷேட நிருபர்

Sat, 12/19/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை