வலிந்து காணாமலாக்கப்பட்டோரது உறவுகள் கவனயீர்ப்புப் போராட்டம்

- சர்வதேச மனித உரிமைகள் தினம்

சர்வதேச மனித உரிமைகள் தினமான நேற்று வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர்.

வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கூறுமாறும் வலியுறுத்தி இப் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

முல்லைத்தீவு

2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ஆம் திகதியிலிருந்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் நேற்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், “உரிமைகள் மறுக்கப்பட்டு வீதியில் நாம், குற்றம் செய்பவர்களுக்கு யாரும் உடந்தையாக இருக்காதீர்கள், கோட்டா அரசே நீ கொண்டு போனவர்கள் எங்கே?” போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் கலந்து கொண்டார்.

யாழ்ப்பாணம்

யாழ்.நாவல் வீதியில் உள்ள அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையகத்துக்கு முன்பாக உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது, “எங்கள் மீதும் குண்டுகளைப் போட்டு கொன்று விடுங்கள்” என்று உறவுகள் கதறி அழுதனர். கொரோனா காரணமாக குறைந்தளவான உறவுகளே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

இதில் வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜி லிங்கமும் பங்கேற்றார். வலிந்து காணா மல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சர்வதேசமும் ஐ.நாவும் நீதியை வழங்கவேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் வலியுறுத்தினர்.

கிளிநொச்சி

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் எமக்கான எமது உரிமைகள் மீறப்படாதிருப்பதை உறுதிப்படுத்தி உறவுகளுக்கான விடுதலையை சர்வதேசம் பெற்றுத் தர வேண்டும் என கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

கிளிநொச்சியில் இரண்டு போராட்டங்கள் நடைபெற்றன. காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளது அலுவலகம் முன்பாக ஒரு போராட்டமும், கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக இன்னொரு போராட்டமும் நடைபெற்றது

மன்னார்

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு கோரி அமைதி ஊர்வலம் ஒன்றை மேற்கொண்டனர். மன்னார் டெலிகொம் சந்தியில் ஆரம்பமாகி மன்னார் மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஊடாக மன்னார் பஸார் பகுதியை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மன்னார் புதிய பேருந்து தரிப்பிடத்திற்கு முன் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படங்கள் மற்றும் பதாதைகளை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரினால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. நேற்று காலை 10.30 மணியளவில் வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்பட்டது.

கொவிட் -19 காரணமாக சமூக இடைவெளி, முகக்கவசங்களை அணிந்தவாறு போராட்டத்தில் 30க்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

மாங்குளம், மன்னார், யாழ்ப்பாணம் குறூப், பருத்தித்துறை, தலைமன்னார், வவுனியா, ஓமந்தை விசேட நிருபர்கள்

Fri, 12/11/2020 - 10:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை