அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்தும் நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்படும்

புதிய நீதிபதிகள் பதவிப்பிரமாண வைபவத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ

நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாத்து, அதன் செயற்பாடுகளை அரசியல் மற்றும் வேறு தலையீடுகளிலிருந்து நீக்குவதற்கு தான் உறுதியுடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றும் கூறினார்.

நீதித்துறையில் ஒரு புதிய மைல்கல்லைக் குறிக்கும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்டுள்ள 21 புதிய நீதிபதிகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் நேற்று முன்தினம் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

உயர்நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகளின் எண்ணிக்கை 1978 முதல் மாறாமல் உள்ளது. மேல் நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் கடந்த காலங்களில் பலமுறை விவாதிக்கப்பட்டாலும், அது 40 ஆண்டுகளுக்கும் மேலாக மாறாமல் உள்ளது.

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்துடன் இந்த நீண்டகால தேவையை எமது அரசாங்கத்தினால் பூர்த்தி செய்ய முடிந்தமை பெருமை அளிக்கிறது என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சட்டத்தின் தாமதங்கள் நீடித்த பிரச்சினைகளுக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

'நீதி தாமதமாவது, நீதி பறிக்கப்படுகிறது' என்ற பழமொழியை மேற்கோள் காட்டிய ஜனாதிபதி, 20 ஆவது திருத்தம் நீதி நிர்வாகத்தின் செயல்திறனை அதிகரிக்க உச்சநீதிமன்ற பதவிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்கியுள்ளது என்று கூறினார்.

நீதியை, வினைத்திறனாக நிர்வகிப்பது சட்ட ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமன்றி நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் இன்றியமையாதது. நீதியை வழங்குவதற்கான செயன்முறைகள் நம்பகமான, வினைத்திறனான மற்றும் பயனுள்ள முறையில் பிரச்சினைகளை தீர்த்து தேசத்தின் முன்னேற்றத்திற்கு வளம் சேர்க்கும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

வலுவான, வினைத்திறனான மற்றும் சுயாதீனமான நீதி அமைப்பின் முக்கியத்துவத்தை அரசாங்கம் நன்கு அறிந்திருக்கிறது. அதன் திறனை அதிகரிக்க வேண்டியதன் அவசியம் பற்றியும் அது ஆழமான புரிதலைக் கொண்டுள்ளது.

நீதிச் செயற்பாட்டில் மக்களுக்கு நம்பிக்கை இருக்க வேண்டுமென்றால், அச்செயல்முறை வெளிப்படையாக இருக்க வேண்டுமென்றும் ஜனாதிபதி கூறினார்.

 

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை