கொரோனா பைசர் தடுப்பூசிக்கு முதல் நாடாக பிரிட்டன் ஒப்புதல்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பைசர்– பயோஎன்டெக் தடுப்பூசிக்கு உலகின் முதல் நாடாக பிரிட்டன் நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மருந்து அடுத்த மாதம் முதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

இது ஒரு நல்ல செய்தி என்று அறிவித்திருக்கும் சுகாதார அமைச்சர் மெட் ஹான்கொக், இதனை விநியோகிக்கும் திட்டம் அடுத்து வார ஆரம்பத்தில் முன்னெடுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மருந்தைப் பெறும் முதன்மைக் குழுவினர் யார் என்பது பற்றி பிரிட்டன் தடுப்பு மருந்துக் குழு தீர்மானிக்கவுள்ளது. சுகாதார சேவை பணியாளர்கள், வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மருத்துவ ரீதியில் பாதிக்கப்படக்கூடியவர்கள் தீர்க்கமானவர்களாக பார்க்கப்படுகின்றனர்.

கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக உயிரிழப்பு இடம்பெற்ற ஐரோப்பிய நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு 1.6 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 59,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட பைசர் மற்றும் பிரிட்டன் கூட்டாண்மையான பயோஎன்டெக் இணைந்து மேம்படுத்தி இருக்கும் இந்தத் தடுப்பு மருந்து 90 வீதத்திற்கு மேல் செயல்திறன் கொண்டது என்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இரண்டு டோஸ்களாக வழங்கப்பட வேண்டிய இந்தத் தடுப்பு மருந்தின் நான்கு கோடி டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே கோரியுள்ளது. இது இரண்டு கோடிப் பேருக்கு கொவிட்–19 தொற்றுக்கான நோய் எதிர்ப்பாற்றலை உண்டாக்க போதுமானது. இதில் 10 மில்லியன் டோஸ்கள் பிரிட்டனுக்கு விரைவில் கிடைக்கவிருப்பதோடு எதிர்வரும் நாட்களில் 80,000 டோஸ்கள் வரவுள்ளன. இந்தத் தடுப்பு மருந்து செலுத்தப்படுபவர்களுக்கு மூன்று வார இடைவெளியில் இரண்டு டோஸ்கள் வழங்கப்பட வேண்டும். இந்தத் தடுப்பு மருந்து ஆறு நாடுகளில் 43 ஆயிரத்து 500 பேரிடம் பரிசோதிக்கப்பட்டது. மேலும் இது குறித்து எந்த பாதுகாப்பு அச்சங்களும் எழவில்லை.

வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாடு வரை வருவதற்கு 10 ஆண்டுகள் வரை ஆகும்.

ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

இதுவரை உலகில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் மிகவும் குறைவான காலத்தில் பயன்பாட்டுக்கு வந்தது இந்தத் தடுப்பூசியாகும்.

கொரோனா தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்பட்டாலும் கொரோனா நோய் பரவலைக் கட்டுப்படுத்த சமூக விலகல், முகக்கவசம் அணிதல், அறிகுறிகள் உள்ளவர்களை மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் சுயதனிமைப்படுத்திக்கொள்ளுதல் உள்ளிட்ட விதிகளைக் கடைபிடிப்பது அவசியம் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Thu, 12/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை