தொற்றுக்குள்ளான பலரும் தம்மை இனம்காட்ட பின்னடிப்பு

கட்டுப்படுத்துவதில் காலதாமதத்திற்கு இதுவே காரணம்

கொரோனா வைரஸ் தொடர்பில் மக்களுக்குள்ள அச்சம் இல்லாதொழிக்கப்பட வேண்டுமென இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் தம்மை மறைப்பதற்கு மேற்கொள்ளும் நடவடிக்கைகளே கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு தடையாக அமைந்துள்ளதாகவும் அந்த நிலையை மாற்றுவதற்கு சிறந்த உபாயமும் வேலைத் திட்டமொன்றும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் சுகாதார அமைச்சில் நடைபெற்ற கொரோனா வைரஸ் தொடர்பான மீளாய்வு கூட்டத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மத்தியில் கருத்து தெரிவித்த போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர்:

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் மக்கள் வீண் பயம் கொள்ளத் தேவையில்லை. அதேபோன்று வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள நபர்களை சந்தேகக் கண்ணோடு பார்த்து புறக்கணித்து செயற்பட வேண்டிய அவசியமுமில்லை. அந்த நிலையை மாற்றும் வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியமாகும். ஊடகங்கள் மூலம் அதற்கான செயற்பாடுகளை மேற்கொள்வது முக்கியமென்றும் தெரிவித்துள்ளார்.

பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிப்பது தொடர்பில் கவனம் செலுத்திய அவர் அதுதொடர்பில் எதிர்கொள்ள நேரும் அசௌகரியங்கள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.அதேவேளை கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் காணப்படும் பிரதேசங்களில் அம்பியூலன்ஸ் வண்டிகளின் குறைபாடுகள் தொடர்பிலும் அவர் அங்கு கலந்துரையாடியுள்ளார்.

அதற்காக வைரஸ் தொற்று நோயாளிகள் காணப்படாத பிரதேசங்களிலுள்ளஅம்பியூலன்ஸ் வண்டிகளை பெற்றுக்கொள்வது தொடர்பிலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

அதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக மரணமடைந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கு பொருளாதார வசதியில்லாத குடும்பங்களுக்கு அவர்கள் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் அரசாங்க செலவில் அதனை மேற்கொள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆலோசனை வழங்கியுள்ளார் என்பதையும் இராஜாங்க அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் சுகாதார அமைச்சின் பங்கேற்புடன் மேற்கொள்ள வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பிலும் எதிர்வரும் பண்டிகைக் காலங்களில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் அவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை