நாட்டில் அரசியல் கைதிகள் என்று எவருமே கிடையாது

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மம்பில மீண்டும் வலியுறுத்து

பயங்கரவாத தடைச் சட்டத்தின்கீழ் கைதானோர் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத சந்தேகநபர்கள்

பிரதமருக்கு எவரும் தமது பிரச்சினைகளை முன்வைக்கலாம். அதற்காக அவர் அவற்றை ஏற்றுக் கொண்டதாக அர்த்தமில்லை. தமிழ் எம்பிக்கள் கையளித்த மகஜரும் அதுபோன்றதே!

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது. பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுபவர்கள் பயங்கரவாதிகள் அல்லது பயங்கரவாத சந்தேக நபர்களென இணை அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார்.

தமிழ் எம்.பிக்கள் பிரதமருக்கு மகஜர் வழங்கியதற்காக அதிலுள்ளவற்றை பிரதமர் அங்கீகரித்ததாக அர்த்தமாகாதென்று குறிப்பிட்ட அவர், கைதிகள் வயது, பால் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டாலும் இன ரீதியாக வகைப்படுத்தப்படுவதில்லையென்றும் கூறினார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாடு Zoom தொழில்நுட்பத்தினூடாக நேற்று நடைபெற்றது.

1994 முதல் இருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி தமிழ் எம். பிக்கள் பிரதமருக்கு மகஜர் வழங்கியுள்ளனர். இந்த தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதில் அளித்த அவர்,

இலங்கையில் அரசியல் கைதிகள் எவரும் கிடையாது என்பதை பொறுப்புடன் கூறுகிறேன். தமது அரசியல் நிலைப்பாட்டிற்காக கைது செய்யப்படுபவர்கள் தான் அரசியல் கைதிகளென அழைக்கப்படுகின்றனர். சிங்கப்பூர் கம்யூனிஸ் கட்சி தடைசெய்யப்பட்ட போது இரகசியமாக அரசியல் செய்தோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் கம்யூனிஸ்ட் கட்சி,ஜே.வி.பி, சமசமாஜ கட்சி தடை செய்யப்பட்டு தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். அரசியல் நிலைப்பாட்டிற்காக குரல்கொடுத்தனர். தமிழர் என்பதற்காக எவரும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படவில்லை. தமிழ் அரசியல் கைதிகள் நாட்டில் கிடையாது. பயங்கரவாத செயற்பாட்டிற்காக கைதானவர்கள் உள்ளனர். வேறு தவறுகளுக்காக கைதானவர்கள் உள்ளனர். கைதிகள் வயது, பால் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டாலும் இன ரீதியாக வகைப்படுத்தப்படவில்லை. 80 பேர் இருப்பதாக கூறுவதாயின் அதில் ஒருவரின் பெயரை முன்வைக்குமாறு கோருகிறோம். அரசியல் கைதியின் பெயர் விபரத்தை முன்வைக்குமாறு கோருகிறோம் என்றார்.

பிரதமருக்கு வழங்கிய மகஜரை அவர் ஏற்றுக் கொண்டார். தமிழ் அரசியல் கைதிகள் கிடையாதென அவர் நிராகரிக்கவில்லையே என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், பிரதமருக்கு எவருக்கும் தமது பிரச்சினைகளை முன்வைக்கலாம். பின்னர் தொடர்புள்ள நிறுவனத்திற்கு அது சமர்ப்பிக்கப்பட்டு அதன் உண்மை நிலைமை குறித்து ஆராயப்படும்.பிரதமருக்கு மகஜர் கொடுத்ததற்காக அதனை ஏற்றதாகவோ அதிலுள்ளவை உண்மை என்றோ கூற முடியாது. அது பிரதமருக்கு செய்யும் அநீதியாகும். பயங்கரவாதத்தைத் தடுக்கும் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் பயங்கரவாத சந்தேகநபர்களாவார்கள். அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தால் அவர்கள் பயங்கரவாதிகள். இன்றேல் பயங்கரவாத சந்தேகநபர்களாவார்கள். அவர்கள் தமிழ் அரசியல் கைதிகள் அல்லர்.

மகஜரில் இருக்கும் விடயங்கள் உண்மையென பிரதமர் அதே இடத்தில் கூறுவதில்லை. அதனை தொடர்புள்ள நிறுவனங்களுக்கு அனுப்பி ஆராய்ந்து பதில் அனுப்புவார்கள். பிரதமர் பொறுப்பேற்றதற்காக அதிலுள்ளவை உண்மையான விடயங்கள் என்று அர்த்தமாகாது.அதனை நிராகரித்ததாகவும் அர்த்தமாகாது.நாம் எந்த ஒரு அரசியல் கைதியையும் தடுத்து வைத்திருக்கவில்லை.

நீண்டகாலமாக வழக்கு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த கைதிகள் தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர்,

நீதிமன்றம் தான் இது தொடர்பில் முடிவு செய்ய வேண்டும்.நீதிமன்றம் சுயாதீனமாக செயற்படுகிறது.சம்பந்தன், சுமந்திரன் போன்ற சட்டம் குறித்து அறிந்தவர்களினால் தனிநபர் பிரேரணையாக சட்டத்தில் செய்ய வேண்டிய மாற்றம் குறித்து யோசனை முன்வைக்க முடியும். 20 வருடத்திற்கு மேலாக சட்டத்திலுள்ள குறைபாடு காரணமாக இவர்கள் கைதாகியிருப்பதாக தனிநபர் பிரேணை முன்வைக்கலாம். தமது அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்துவதால் அவர்கள் அரசியல் கைதிகள் என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது என்றார்.

ஷம்ஸ் பாஹிம்

 

Wed, 12/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை