கேகாலை, உடுமாகம பிரதேசம்; தம்மிக்க பண்டாரவின் மருந்துக்கு தற்காலிகத் தடை

கேகாலை நாட்டு வைத்தியரான தம்மிக்க பண்டாரவினால் தயாரிக்கப்பட்டு மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட கொரோனா வைரஸுக்கான மருந்து விநியோகம் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரது வீட்டுக்கு முன்னால் அணிதிரண்டமையால் அது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய செயலென தெரிவித்துள்ள பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேற்படி விவகாரம் தொடர்பில் முழுமையான அறிக்கை ஒன்றை பெற்றுத்தருமாறு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

மேற்படி மருந்து வைரஸ் தொற்று பாவனைக்கு உகந்ததென மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் முடிவு பெறாத நிலையில் மேற்படி மருந்து விநியோகத்தை தடை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேற்படி நாட்டு வைத்தியர் கேகாலை மாவட்ட செயலகத்திற்கு அழைக்கப்பட்டு அங்கு நடைபெற்ற பேச்சுவார்ததையையடுத்து மேற்படி மருந்து விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. பெருமளவான மக்கள் திரண்ட நிலையில் மேற்படி மருந்து விநியோகம் நடைபெற்றதால் கேகாலை மக்கள் வைரஸ் தொற்று எச்சரிக்கைக்கு உள்ளாகியுள்ளனரென மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்தது. அது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது;

கொரோனா வைரஸ் நோயை இல்லாதொழிக்கும் மருந்தெனக்கூறி தேசிய மருத்துவர் தம்மிக பண்டார உற்பத்தி செய்த ஆயுர்வேத மருந்தை பெற்றுக்கொள்வதற்காக பல்லாயிரக்கணக்கான மக்கள் மேற்படி மருத்துவரின் கேகாலை, உடுமாகம பிரதேசத்திலுள்ள வீட்டை முற்றுகையிட்டனர்.

இலவசமாக வழங்கப்பட்ட மருந்து பெற்றுக்கொள்வதற்காக தனிமைப்படுத்தலுக்கான சட்டங்களை மீறி ஆயிரக்கணக்கானோர் மேற்படி மருத்துவரின் வீட்டை நோக்கி படையெடுத்துள்ளனர்.

அந்தப் பிரதேசம் பெரும் நெருக்கடி நிலையை எதிர்கொண்டதுடன் அங்கு திரண்ட மக்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அந்த சம்பவம் தொடர்பில் முழுமையான அறிக்கையை பெற்றுத்தருமாறு கேகாலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன பணிப்புரை விடுத்துள்ளார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

Thu, 12/10/2020 - 10:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை