வசதிகள் இருந்தும் வைத்தியரின்றி இயங்கும் வெஞ்சர் தோட்ட வைத்தியசாலை

நுவரெலியா மாவட்டத்திற்குட்பட்ட மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் சுமார் 90 வருட கால பழமைவாய்ந்த நோர்வூட் வெஞ்சர் தோட்ட வைத்தியசாலை பல்வேறு வசதிகள் காணப்பட்ட போதிலும் குறித்த வைத்தியசலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லையென பொது மக்கள் அங்கலாய்க்கின்றனர். இந்த வைத்தியசாலையில் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு இருந்த வைத்தியர் சுகயீனம் காரணமாக உயிழிழந்தார்.

அதன் பின்னர் இதுவரை எவரும் குறித்த இடத்திற்கு நியமிக்கப்படவில்லையென தெரிவிக்கும் தோட்ட மக்கள் நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிப்பதில் தோட்ட நிர்வாகம் இழுபறியில் இருந்து வருவதாக தோட்ட மக்கள் குற்றஞ் சுமத்துகின்றனர்.

இந்த வைத்தியசாலைக்கு வெஞ்சர், அப்பலோரன்ஸ், லோவலோரன்ஸ், 50 ஏக்கர் ஆகிய நான்கு தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த சுமார் ஐயாயிரம் பேர் வாழுகின்றனர்.

இப்பகுதி மக்கள் மேற்படி தோட்ட வைத்தியசாலைக்கு சென்றாலும் எவ்வித பலனும் இல்லையெனவும் அங்கு தாதியரொருவர் மாத்திரமே இருப்பதாகவும் தெரிவிக்கின்றனர். இப் பகுதி கொரோனா கொத்தணியாக மாறியுள்ள நிலையில் வெஞ்சர் லோவலெரன்ஸ் தோட்டப் பகுதியில் நான்கு கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் தொற்றாளர்களோடு தொடர்பினை பேணி வந்தவர்கள் தனிமைப்படுத்தபட்டுள்ள நிலையில், அவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகள் வெஞ்சர் தோட்ட வைத்தியசாலையின் அருகாமையில் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் அந்த வைத்தியசாலையினை சுற்றி கிருமிநாசினிகள் தெளிக்கப்படுவதில்லையெனவும் இப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எமது வைத்தியசாலையில் சகல வசதிகள் காணப்படுகின்ற போதிலும் ஒரு நிரந்தர வைத்தியரை நியமிக்குமாறு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் வீடமைப்பு மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானுக்கு மக்கள் மனு ஒன்றினை வழங்கிய போதும் இதுவரையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் தோட்ட மக்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.

நோட்டன் பிரிட்ஜ் நிருபர்

Thu, 12/31/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை