குழப்பத்திற்கு காரணமான பிரதி தவிசாளரும் உறுப்பினர் இருவரும் கைது

15 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

வாழைச்சேனை பிரதேச சபையின் 2021ம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்னதாக இடம்பெற்ற அமைதியற்ற சூழ்நிலை காரணமாக கைது செய்யப்பட்ட பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர் இருவரையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.எம்.பஸீல் கட்டளை பிறப்பித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பிரதேச சபையின் பிரதி தவிசாளர் தர்மலிங்கம் யசோதரன் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சபை உறுப்பினர் எம்.வாஸ்தீன் ஆகியோர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையானது 2021ம் ஆண்டிற்கான பாதீட்டு அறிக்கை கடந்த 30.11.2020 சமர்பிக்கப்படவிருந்த நிலையில் சபை தவிசாளரினால் 2020.12.08 வரை ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

இதேவேளை தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தின் தலைமையில் மீண்டும் சபை அமர்வு கூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பதாக அமைதியற்ற சூழ்நிலை அங்கு உருவானது.

சபை கூடுவதற்கு முன்பதாக சபை மண்டபத்தை விட்டு தவிசாளர் வெளியில் சென்ற போது மண்டப நுழைவாயிலில் உப தவிசாளர் எதிரே சந்தித்து கொண்டதாகவும் இதனை அடுத்து அந்த இடத்தில் அமைதியற்ற சூழ்நிலை இருவருக்கிடையில் இடம்பெற்றதாகவும், இதனையடுத்து சபை வளாகத்தில் அமைதியற்ற சூழ் நிலை இடம்பெற்றது. பொலிஸார் அமைதியை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அத்தோடு வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் திருமதி.சோபா ஜெயரஞ்சித்தின் ஆடையை கிழித்து தாக்கியதாக கூறி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கல்குடா தினகரன் நிருபர்

Thu, 12/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை