உலக சுகாதார அமைப்புடன் சுகாதார அமைச்சு பேச்சு

ரமேஷ் பத்திரன

கொரோனா வைரஸ் தடுப்பு ஊசி மருந்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதுடன் அதற்கான வேண்டுகோளையும் விடுத்துள்ளதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்தார்.

உலக சுகாதார அமைப்பானது மேற்படி ஊசி மருந்தை அனைத்து நாடுகளுக்கும் சமமாக பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர், இலங்கைக்கான தடுப்பூசி தொகுதியை பெற்றுக்கொள்வது தொடர்பில் சுகாதார அமைச்சு உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் ரமேஷ் பத்திரன,

உலக சுகாதார அமைப்பானது தற்போது மேற்படி தடுப்பூசியை உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் சார்பில் சுகாதார அமைச்சு எமது நாட்டுக்கான ஊசி மருந்து தொகையைப் பெற்றுக் கொள்ளும் வகையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அதேவேளை, ​ெகாரோனா வைரஸ் நோய்க்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்டுள்ள தேசிய ஆயுர்வேத உற்பத்தி மருந்து தொடர்பில் தற்போது பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. அந்த மருந்து சுகாதார அமைச்சிடம் கையளிக்கப் பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றது. அது தொடர்பில் முழுமையான ஆய்வின் பின்னரே சந்தேகத்திற்கிடமின்றி உறுதிப்படுத்தப்பட்டு அது உபயோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

அது பயன் தருமானால் குறுகிய காலத்தில் அதனை பெற்றுக்கொடுப்பதற்கு மேற்கத்திய மருத்துவர்கள் இணங்கியுள்ளனர். அவ்வாறு அதன் பலனைப் பெற்றுக்கொள்ள முடியுமானால் இன்னும் மூன்று அல்லது ஆறு மாத காலத்தில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்து நாம் மீள முடியுமென்ற எதிர்பார்ப்பு உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Wed, 12/09/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை