நேபாளம் மற்றும் இந்தியாவுக்கு இடையே உறவை மேம்படுத்துவதில் முன்னேற்றம்

இந்தியா மற்றும் நேபாளத்திற்கு இடையில் இடம்பெற்ற அரசுகளுக்கு இடையிலான குழுவின் (ஐ.ஜி.சி.) உயர்மட்டக் கூட்டத்தில் வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒப்பந்தங்களை மீளாய்வு செய்வது உட்பட இரு தரப்பு நிகழ்ச்சி நிரல் தொடர்பில் பரந்த அளவில் மீளாய்வு செய்யப்பட்டதாக நேபாளத்திற்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளினதும் வர்த்தகச் செயலாளர்கள் தலைமையில் கடந்த வாரம் வீடியோ கொன்பிரன்ஸ் முறையில் இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இரு நாட்டு வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான உயர்மட்ட பொறிமுறையாக ஐ.ஜி.சி உள்ளது.

இந்திய அரசின் வர்த்தகச் செயலாளர் அநுப் வதாவன் உடன் நோபளத்திற்கான இந்திய தூதுவர் விநாய் மோஹன் குவாத்ரா மற்றும் பல்வேறு அமைச்சுகளில் இருந்து 15 பிரதிநிதிகளும் நேபாளத்தின் வர்த்தகச் செயலாளர் பைகுன்தா அர்யால் மற்றும் அந்நாட்டின் பல்வேறு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்றதாக இந்திய தூதரக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இருநாட்டு எல்லை பொருளாதார வலயங்களை மேம்படுத்துவதற்கான முன்மொழிவுகள் மற்றும் கூட்டு வர்த்தக மன்ற கூட்டங்களை நடத்துவது உட்பட முதலீட்டை மேம்படுத்துவதற்கு அதேபோன்று வர்த்தக உட்கட்டமைப்பை அபிவிருத்தி செய்வதற்கு இரு தரப்பும் முன்னேற்றம் கண்ட நிலையில் இந்த மாநாடு நிறைவடைந்ததாக இந்திய தூதரகத்தை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

கொவிட்–19 பெருந்தொற்றுக்கு மத்தியிலும் ஆதரவு மற்றும் வசதிகள் அளிக்கும் வகையில் டிரக் வண்டிகள் மூலம் தரை எல்லைகள் ஊடாக வர்த்தக மற்றும் வர்த்தக சரக்குகள் ‘சீராக மற்றும் தடையின்றி’ செயற்படுவது பற்றி இரு நாட்டு வர்த்தக செயலாளர்களும் குறிப்பிட்டு கூறியதோடு பாராட்டுகளை தெரிவித்ததாக இரு நாட்டு தூதரகங்களும் குறிப்பிட்டன.

‘பரந்த அளவில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதோடு இதில் எட்டப்பட்ட முன்னேற்றம் இந்திய மற்றும் நேபாளத்திற்கு இடையில் பொருளாதார மற்றும் வர்த்தக உறவை விரிவுபடுத்துவதற்கு மேலும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது’ என்று இதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.ஜி.சி கூட்டத்திற்கான தயார்படுத்தல்களை செய்வதற்கு கடந்த டிசம்பர் 3 மற்றும் 4 ஆம் திகதிகளில் கூட்டுச் செயலாளர்கள் மட்டத்தில் அரசுகளுக்கு இடையிலான உப குழுக் கூட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்திய வெளியுறவுச் செயலாளர் ஹார்ஷ் வார்தான் சிறிங்லா நோபளத்திற்கு விஜயம் மேற்கொண்டு சில நாட்களின் பின்னரே இந்தக் கூட்டம் இடம்பெற்றது. இந்த விஜயத்தின்போது சிறிங்லா, நேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி மற்றும் பிரதமர் கே.பி ஒலி ஆகியோரால் அழைக்கப்பட்டிருந்தார். இதன்போது நேபாள வெளியுறவு அமைச்சர் பிரதீப் குமார் க்யாவாலி மற்றும் நேபாள வெளியுறவுச் செயலாளர் பாரத் ராஜ் பௌட்யா ஆகியோரையும் சிறிங்லா சந்தித்தார்.

நேபாள இறக்குமதி மற்றும் நேபாள ஏற்றுமதி இரு துறைகளிலும் நேபாளத்தின் மிகப்பெரிய வர்த்தக மற்றும் முதலீட்டு கூட்டாளியாக இந்தியா தொடர்ந்து நீடிப்பதாக இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது. ‘கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக நேபாள ஏற்றுமதிகள் தொடர்ச்சியாக அதிகரித்திருக்கும் நிலையில் உண்மையில், நேபாளத்தின் ஒரே வர்த்தக நட்பு நாடாக இந்திய உள்ளது’ என்று அது சுட்டிக்காட்டியது.

 

Mon, 12/14/2020 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை