மனித உரிமைகளில் பெண்களுக்கான சமத்துவம் வழங்கப்படுகிறதா?

- பெண்கள் ஒத்துழைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பொ. லோகேஸ்வரி

உலகின் தொழிற்படையில் கணிசமான அளவு பெண்களின் பங்களிப்பு அதிகரித்தே காணப்படுகின்றது.இன்று ஒரு நாட்டின் வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகிறது என்று பெண்கள் ஒத்துழைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பொ. லோகேஸ்வரி தெரிவித்தார்.

சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு பெண்கள் ஒத்துழைப்பு ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் பொ. லோகேஸ்வரி தினகரனுக்கு தெரிவித்த சில கருத்துக்கள்,......

பிறப்பு முதல் இறப்புவரை ஆண், பெண் இருபாலாரும் சமனான உரிமைகளுக்கு உரித்துடையவர்களாவர். ஒவ்வொறு வருடமும் டிசம்பர் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. எனினும் இவ் உரிமைகள் பெண்களுக்கும் இருக்கிறதா? என்ற சந்தேகம் நிழவுகிறது. ஆணும் பெண்ணும் சமம் என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளாத ஆதிக்கவாத சிந்தனை கொண்டவர்களுக்கு பெண் உரிமை பற்றிபேசும் போது கசப்பாக தான் இருக்கிறது. சாஸ்திரங்களையும சம்பிரதாயங்களையும் பற்றி பிடித்துக் கொண்டு மறைகரத்தில் பெண்களுடைய உரிமைகளையும் சுதந்திரத்தையும் பறிக்கும் கூட்டத்தினர் இன்றும் சமூகத்தில் உள்ளனர்.

உலகின் தொழிற்படையில் கணிசமான அளவு பெண்களின் பங்களிப்பு அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. ஆணாதிக்க சிந்தனை கொண்ட ஆண்களே அசந்து பார்க்கும் அளவு முன்னேறி பெண்கள் சாதனையும் படைத்துள்ளனர்.

பெண்களில் அதிகமானோர் தொழிற்சாலைகளிலும் வீட்டுப்பணிப் பெண்களாகவும் புலம்பெயர் தொழிலாளர்களாகவும், பெருந்தோட்டத்தில் தொழில் புரிபவர்களாகவும், அன்னிய செலாவணியை ஈட்டிக் கொடுப்பதிலும் பொருளாதாரத்தை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர்.

நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பு செய்யும் பெண்கள் தனது உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுகின்றார்களா? இல்லை,தொழிலின் போது பல்வேறு வகையான அச்சுறுத்தல்களுக்கு முகங் கொடுக்கின்றனர். அதனை வெளியில் சொல்ல முடியாமல் மனரீதியான பாதிப்புக்களுக்கு முகங்கொடுப்பதை காணலாம். தனக்கு நடந்ததைப் பற்றிய அவமானம் ,வெட்கம் மற்றும் ஆதாரங்கள் இல்லாததால் தாங்கள் சொல்வதை நம்பமாட்டார்களோ என்ற அச்சம், மற்றவர்களின் புறம் பேசுதலுக்கு ஆளாகி மேலும் அவமானம் நேருமோ என்று ஆண்களின் மோசமான நடத்தைகளை பொறுத்துக் கொண்டு பெண்கள் இருக்க வேண்டும்.

பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் தொழில் புரியும் பெண்கள் தனது தொழிலின் போது உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்படுவது மட்டுமல்லாது தான் செய்யும் தொழிலுக்குரிய சரியான ஊதியமும் கிடைப்பதில்லை.

இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கின்றனர். இலங்கை சனத்தொகையில் 52 வீதமாக பெண்கள் இருந்த போதிலும் பெண்கள் அவர்களுக்கான உரிமைகளை அனுபவிக்கின்றார்களா? என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும்.

சட்ட ரீதியாக பல உரிமையை பெற்றுள்ளனர். எனினும் அவற்றை முழுமையாக அனுபவிப்பதில்லை.இலங்கையில் பல்வேறு தொழிற் பாதுகாப்பு சட்டங்கள் உள்ளன. தொழிலதிபர்கள் இவ்வாறான சட்டங்களை முறையாக பின்பற்றாமை,பெண்களுடைய தொழில் ரீதியான உரிமை மீறப்படுவதற்கான காரணம் என்றும் கூறலாம். பெண்களுக்கான உரிமைகள் குறித்து தொழிலதிபர்கள் தெரிந்து வைத்திருப்பதோடு அவ் உரிமைகளை அவர்கள் அனுபவிக்க வழிவகுக்க வேண்டும்.

பெண்கள் தாம் செய்யும் தொழில் தொடர்பாக தெளிவூட்டப்பட வேண்டும். அத்துடன் பெண்கள் நாட்டிற்கு செய்யும் சேவையை கருத்திற் கொண்டு சமத்துவத்தினை ஏற்படுத்தவும் வேண்டும். பெண் விடுதலை இல்லையேல் நாட்டுக்கும் விடுதலை இல்லை.

ஆண்களுக்குள்ள அனைத்து உரிமைகளும் பெண்களுக்கும் உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

மேலும் ஆண்,பெண் சமத்துவ ரீதியிலான பாதீடு சகல நாடுகளும் உருவாக்க முன்வர வேண்டும்.பாதீட்டிலே பெண்கள் ஓரங் கட்டபடக் கூடாது.இவ்வாறான பாதீடு பாரபட்சங்களை நீக்க வேண்டும்.

Wed, 12/09/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை