தினசரி தொற்று சம்பவங்கள்: அமெரிக்காவில் புதிய உச்சம்

அமெரிக்காவில் தொடர்ச்சியாக மூன்றாவது நாளாகவும் கொரோனா வைரஸ் தொற்றுச் சம்பவங்கள் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்த நோய்த் தொற்றினால் உலகில் மோசமாக பாதிக்கப்பட்டிருக்கும் நாடான அமெரிக்காவில் கடந்த சனிக்கிழமை சுமார் 230,000 புதிய நோய்த் தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு மேலும் 2,527 பேர் உயிரிழந்திருப்பதாக ஜோன் ஹொப்கின்சன் பல்கலைக்கழக தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த இரண்டு வாரங்களாக நாளாந்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,000ஐ தாண்டி பதிவாகி வருகிறது.

மருத்துவமனைக்கு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக அதிக மக்கள் தொகை கொண்ட கலிபோர்னியா, நியூயோர்க் மற்றும் டெக்ஸாஸ் போன்ற மாநிலங்களில் நிலைமை மோசமடைந்து வருகிறது. மக்களை வீட்டில் இருக்கும்படி நிர்வாகம் எச்சரித்த நிலையிலும் கடந்த வார விடுமுறையைக் கொண்டாட பலரும் வீடுகளை விட்டு வெளியேறிய நிலையிலேயே தற்போது நோய்த் தொற்று உச்சத்தை தொட்டிருப்பதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தொற்றினால் உலகெங்கும் பதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 66 மில்லியனைத் தொட்டிருப்பதோடு 1.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்கா கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்துக்கு இந்த மாத நடுப்பகுதியில் ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் மொத்தம் 14.6 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 281,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

Mon, 12/07/2020 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை