நைஜீரியாவில் கொரோனாவின் வீரியமிக்க திரிபு கண்டுபிடிப்பு

நைஜீரியாவில் மேலும் வீரியமிக்க, புதிய வகை கொரோனா வைரஸ் பரவுவதாக தென்னாபிரிக்க சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இங்கிலாந்தில் பரவும் புதிய வகை கொரோனா வைரஸ் போன்றே, தென்னாபிரிக்காவிலும் உருமாற்றம் அடைந்த பெருந்தொற்று பரவுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவற்றை விட வீரியமிக்க, உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் நைஜீரியாவில் கண்டறியப்பட்டுள்ளது. புதுவகை கொரோனா வைரஸ் இளம் வயதினரை அதிகம் பாதிக்கும் என்பதாலும், நைஜீரியா அதிக இளைஞர்களை கொண்ட நாடு என்பதாலும் அதிர்வலைகள் உருவாகியுள்ளன.

கடந்த ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் கொரோனா நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட இரத்த மாதிரிகளை ஆய்வு செய்த போது வைரஸ் மரபியல் மாற்றம் அடைந்திருப்பது தெரியவந்ததுள்ளது.

நைஜீரியா மற்றும் தென்னாபிரிக்க நாடுகளில் நோய்த் தொற்று வேகம் அண்மைக் காலத்தில் அதிகரித்திருக்கும் நிலையிலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. கடந்த வாரத்தில் நைஜீரியாவில் நோய்த் தொற்று வேகம் 52 வீதமும் தென்னாபிரிக்காவில் 40 வீதமும் அதிகரித்திருப்பதாக நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான ஆபிரிக்க மத்திய நிலையத்தின் தலைவர் ஜோன் நிகங்கசொங் தெரிவித்துள்ளார்.

ஆபிரிக்க கண்டத்தில் கொரோனா தொற்றுச் சம்பவங்கள் 2.5 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது உலக நோய்த் தொற்று சம்பவங்களில் 3.3 வீதமாகும்.

மறுபுறம் பிரிட்டன் தவிர, டென்மார்க், பெல்ஜியம், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் மரபணுவை மாற்றிக்கொண்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாகும் வைரஸ்கள் அவ்வப்போது தங்களது உள்கட்டமைப்பில் ஒரு சில மாற்றங்களை செய்து கொண்டேயிருக்கும். இது வழக்கமான மாறுபாடுதான். சில வைரஸ்கள் ஒவ்வொரு நாடு அல்லது கண்டத்துக்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொண்டு வேகமாகப் பரவும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும்.

ஆனால், கவலைதரும் விடயம் என்னவென்றால், இந்த வைரஸ் அதன் மேற்புரத்திலிருக்கும் புரதத்தை மாற்றிக் கொண்டிருப்பதே. இதனால், தற்போதிருக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திகளிடமிருந்து தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுவிட வாய்ப்பு உள்ளது.

Sat, 12/26/2020 - 17:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை