முகக்கவசம் இல்லாது செல்பி: சிலி ஜனாதிபதிக்கு அபராதம்

முகக்கவசம் அணியாமல் செல்பி படம் எடுத்துக்கொண்ட சிலியின் ஜனாதிபதிக்கு 3,500 டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செபாஸ்டியன் பின்யேரா பெண் ஒருவருடன் எடுத்துக்கொண்ட படம் இம்மாதம் இணையத்தில் பரவியது. தமது வீட்டின் அருகே படம் எடுக்கப்பட்டபோது தாம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்று ஒப்புக்கொண்டார் அவர்.

பொது இடங்களில் முகக் கவசம் அணிவது குறித்து சிலி கடுமையான விதிமுறைகளை நடைமுறைப்படுத்தியுள்ளது.

முகக்கவசம் அணியத் தவறுபவர்களுக்கு அபராதத்துடன் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.

சிலியில் கொவிட் –19 வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 580,000க்கும் அதிகமானோர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். சுமார் 16,000 பேர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் பின்யேரா படங்களால் சர்ச்சையில் சிக்கியது இது முதன்முறை அல்ல.

ஏப்ரலில் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் நடந்துகொண்டிருந்தபோது, படங்கள் எடுக்க முன்வந்தார் அவர். கடந்த ஆண்டு சமத்துவமின்மைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடந்தபோது அவர் பிஸ்ஸா சாப்பிடுவது படமெடுக்கப்பட்டது.

Mon, 12/21/2020 - 12:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை