கொரோனா பாதிப்பில் மனித உரிமைகளும் மீறப்படுகின்றன

- மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சிவப்பிரகாசம்

மக்கள் இன்று கொடிய கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி வருகின்றனர். இதனால் அவர்களின் சுகாதார நலன்கள் மாத்திரமல்ல, அடிப்படை மனித உரிமைகளும் மீறப்பட்டு வருகின்றன என்று மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பி. பி. சிவப்பிரகாசம் தெரிவித்தார்.

மனித உரிமை தினத்தை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி சிவப்பிரகாசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவரின் தொடரும் கருத்தில்,....

இக்கொடிய நோய் உலகளாவிய ரீதியில் மானிட சமூகத்திற்கும், இயற்கைக்கும் பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது. இலங்கையிலும் கொரோனா பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தி வருகின்றது. கிராமங்களிலும், பெருந்தோட்டங்களிலும், நகர் சேரிப்புறங்களிலும் வாழுகின்ற மக்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நோயின் பரவலுடன் உலகளாவிய ரீதியில் சுகாதார வைத்தியத்துறை மாத்திரமல்ல கைத்தொழில் துறை, பெருந்தோட்டத்துறை, விவசாயத்துறை, மீன்பிடித்துறை, வர்த்தகத்துறை போன்றவற்றிலே பல்வேறு பாரதூரமான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. .

அடிமட்டத்திலே வாழுகின்ற பெண்கள், விவசாயிகள், பெருந்தோட்ட தொழிலாளர்கள், நாளாந்த வேதன தொழிலாளர்கள், சிறு வியாபாரிகள் போன்ற பல்வேறு தொழில் துறை சார்ந்தவர்களின் வாழ்வாதாரத்தை முழுமையாக அழித்துள்ளது.

அதுமாத்திரமன்றி உளவியல் ரீதியான பாரிய தாக்கத்தையும், பாலியல் மற்றும் இனவிருத்தி, குடும்ப வன்முறை, பால்நிலை வன்முறை, சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பல்வேறு பிரச்சினைகள் முடக்கம் காலக்கட்டங்களின் போது இடம்பெற்றதாக குறிப்பிடப்படுகின்றது.

ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது மக்களின் குறிப்பாக பெண்கள், சிறுவர்களின் சுகாதார உரிமைகள் மாத்திரமல்ல, வாழ்வதற்கான உரிமை பாதிக்கப்பட்டு வருகின்றது. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கான உரிமை, நியாயத்தை அணுகுவதற்கான உரிமை, பொது சேவைகளை பெற்றுக்கொள்வதற்கான உரிமை, கல்விக்கான உரிமை, சுகாதாரத்திற்கான உரிமை போன்ற பல்வேறு மனித உரிமைகள் கேள்விக்குறியாகி வருகின்றன.

இப்பின்னணியில் சர்வதேச மனித உரிமை தினம் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. இப்பின்னணியில் இலங்கையில் இந்நோயை கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் குறிப்பாக சுகாதார வைத்திய துறையினர் பெரும் அர்ப்பணிப்புக்களை செய்து வருகின்றனர். இவர்களுக்கு துணையாக பாதுகாப்பு துறையினர், அரச சேவை துறையினர் மற்றும் சிவில் அமைப்புகள் தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.

எனவே மக்களை நோயிலிருந்து மாத்திரமல்ல, மனித உரிமை ரீதியாகவும் கௌரவமாகவும், வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக்கூடியதாக உருவாக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

மாவத்தகம தினகரன் நிருபர்

Sat, 12/12/2020 - 11:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை