போலிப் புகைப்படம்: சீனா மீது அவுஸ்திரேலியா கடும் எதிர்ப்பு

சமூக ஊடகங்களில் போலிப் புகைப்படத்தை வெளியிட்டதற்காகச் சீனா மன்னிப்புக் கோர வேண்டும் என்று அவுஸ்திரேலியப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் வலியுறுத்தியுள்ளார்.

ஆப்கானிஸ்தானியக் குழந்தையின் கழுத்தில் அவுஸ்திரேலியப் படைவீரர் கத்தியை வைத்திருக்கும் காட்சி அந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் அந்தப் படத்தைச் சமூக ஊடகத்தில் பதிவேற்றியிருந்தார்.

போலித் தகவலை உள்ளடக்கியது என்று அந்தப் புகைப்படத்தை நீக்கும் படி அவுஸ்திரேலிய அரசு ட்விட்டர் நிறுவனத்தைக் கோட்டுள்ளது.

இந்தப் பதிவு, “உண்மையில் பழிவாங்கும் நோக்குடையது, மோசமாக தாக்குதல் தொடுப்பது, மூர்க்கத்தனமானது” என்று மொரிசன் கடுமையாக சாடியுள்ளார். இந்தப் பதிவுக்காக சீன அரசு முற்றிலும் வெட்கப்பட வேண்டும். இது உலகின் முன் அவர்களை தரங்குறையச் செய்கிறது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதை அகற்றும்படியும், இரு நாட்டு உறவின் பதற்றத்தை சீனா எவ்வாறு கையாள்கிறது என்பதை உலக நாடுகள் கவனிப்பதாகவும் மொரிசன் குறிப்பிட்டார்.

ஆப்கானிஸ்தானில் போர்க் குற்றம் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைக்குப் பின்னர் அவுஸ்திரேலியப் படை வீரர்கள் 13 பேர் கடந்த வாரம் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.  

சீனா மற்றும் அவுஸ்திரேலியாவுக்கு இடையிலான உறவு அண்மைய மாதங்களில் மோசமடைந்துள்ளது. அவுஸ்திரேலிய பொருட்களுக்கு சீனா தடைகளை அறிமுகம் செய்திருப்பதோடு பல்வேறு விடயங்கள் தொடர்பில் சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்கள் அவுஸ்திரேலியாவை தாக்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tue, 12/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை