பிரிட்டனில் 90 வயது மூதாட்டி முதல்வராக தடுப்பூசி பெற்றார்

பிரிட்டனில் கொரோன தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று அதிகாரபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

இதில் வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த 90 வயதான மூதாட்டி முதல் நபராக பைஸர்–பயோஎன்டெக் கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டார்.

பைஸர்–பயோஎன்டெக் நிறுவனம் சார்பில் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா தடுப்பு மருந்து 95 வீதம் செயல்திறன் கொண்டது என ஆய்வில் தெரியவந்தது. இந்த மருந்துக்கு பிரிட்டன் அனுமதி அளித்த நிலையில் முதல்கட்டமாக 80 வயதுக்கு அதிகமான முதியோர், முன்களப்பணியாளர்கள், வீடுகளில் பணியாற்றும் பணியாளர்கள், மருத்துவ, சுகாதாரதப்பணியாளர்கள் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது.

இதற்காக பிரிட்டனில் உள்ள 50க்கும் மேற்பட்ட அரசு மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்துள்ளது.

இதன்படி வடக்கு அயர்லாந்தில் உள்ள என்னிஸ்கிளன் நகரைச் சேர்ந்த 90 வயது மூதாட்டி மார்கரெட் கீனனுக்கு பைஸர் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. கோவன்ட்ரி நகரில் உள்ள பல்கலைக்கழக மருத்துவமனைக்கு நேற்றுக் காலை 6.31 மணிக்கு வந்த கீனனுக்கு செவிலியர் மே பார்ஸன் தடுப்பூசி செலுத்தினார்.

“வைரஸ் தொற்றுத் தடுப்பூசியை முதல் நபராகப் போட்டுக் கொண்டதற்கு நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும்” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆண்டின் பெரும்பகுதியைத் தனியாகவே செலவிட்ட தாம், நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் புத்தாண்டை வரவேற்க முடியும் என்பதை எண்ணி மகிழ்ச்சியடைவதாக கூறினார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் ஐரோப்பாவில் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக பிரிட்டன் உள்ளது. அங்கு அந்த நோய்த் தொற்றினால் 61,000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். உலகெங்கும் இந்த நோய்த் தொற்றினால் 1.5 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பைஸர் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் உலகின் முதல் நாடாக பிரிட்டம் இடம்பெற்றுள்ளது. 40 மில்லியன் அளவு இந்த மருந்தை பெற பிரிட்டன் பதிவு செய்துள்ளது. ஒருவர் இந்த மருந்தை இரு முறை போட்டுக்கொள்ள வேண்டும். எனவே 67 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பிரிட்டனில் 20 மில்லியன் பேர் தடுப்பு மருந்தை போட்டுக்கொள்ள போதுமானதாக உள்ளது.

முதல் வாரத்தில் 800,000 அளவு தடுப்பு மருந்துகள் கிடைக்கப்பெறும் என்று எதிர்பார்க்கப்படவதோடு பராமரிப்பு இல்லங்களில் வசிக்கும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் சுகாதார சேவை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

Wed, 12/09/2020 - 09:03


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை