மஹர சிறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு

மஹர சிறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு-Mahara Prison Unrest-Death Toll Increased to 9-38 Tested Positive-107 Injured

- காயமடைந்தோர் 108 பேர்; 38 பேருக்கு கொரோனா தொற்று
- சொத்துக்கள் பல சேதம்; சேத அறிக்கை இன்று பெற நடவடிக்கை
- ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்வடைந்துள்ளது.

காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒரு கைதி உயிரிழந்ததைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

இச்சம்பவத்தில் 2 சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 108 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக, ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.

அத்துடன், அவர்களுக்கு மேற்கொண்ட  துரித அன்டிஜன் (Rapid Antigen) கொரோனா சோதனையில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், நேற்று (30) 26 பேர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து இதுவரை மொத்தமாக 38 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் (29) இரவு கைதிகள் அமைதியற்ற வகையில் நடந்து கொண்டதைத் தொடர்ந்து கலகமாக மாறிய சம்பவத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு தப்பிக்க முயற்சி செய்த சம்பவத்தை கட்டுப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கையில் குறித்த அனர்த்த நிலை ஏற்பபட்டது.

இச்சம்பவத்தில் சிறைச்சாலை சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேத விபரங்களின் கணிப்பீடு இன்று மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, பரிந்துரைகளை வழங்க, ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன தலைமையில் DIG அஜித் ரோஹண மற்றும் நீதியமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட ஐவர் அடங்கிய குழுவொன்று, நீதி அமைச்சர் அலி சப்ரியினால்  நியமிக்கப்பட்டுள்ளதாக, அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே. மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.

ஐவரடங்கிய குழு
1. ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதி குசலா சரோஜினி வீரவர்தன
2. நீதியமைச்சின் பிரதான சட்ட ஆலோசகர் சட்டத்தரணி யூ.ஆர்.டி. சில்வா
3. நீதியமைச்சின் மேலதிக செயலாளர் (நிர்வாகம்) ரோஹண ஹபுகஸ்வத்த
4. பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண
5 . முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் காமினி ஜயசிங்க

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் உரிய விசாரணையை நடத்துமாறு பொலிஸ் மாஅதிபர் சீ.டி. விக்ரமரத்னவுக்கு, பாதுகாப்புச் செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல், கமல் குணரட்ன பணிப்புரை வழங்கியுள்ளார்.

மஹர சிறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆக உயர்வு-Mahara Prison Unrest-Death Toll Increased to 9-38 Tested Positive-107 Injured

நீதியமைச்சினால் நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு...

Tue, 12/01/2020 - 12:34


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை