Header Ads

கர்ப்பிணி பெண்கள் 55 பேருக்கு வைரஸ் தொற்று

களுத்துறை மாவட்டத்தில் இது வரையில் 55 கர்ப்பிணி தாய்மாருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளதால் இது அபாய நிலையாகும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.அத்தோடு பண்டாரகம பிரதேசத்தில் இதுவரையில் 741 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதோடு, அவர்களில் 601  தொற்றாளர்கள் அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அபாயமற்ற பகுதிகள் என்று கருதப்படும் இடங்களில் கூட எழுமாறாக பி.சி.ஆர். பரிசோதனைகளை முன்னெடுக்கும் போது கனிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்படுகிறார்கள். மேலும் கிளை கொத்தணிகள் உருவாகக் கூடிய வாய்ப்புக்களுள்ளன. வெள்ளவத்தை பிரதேசத்தில் 300 பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 12 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இரத்தினபுரி நகர சபையை அண்மித்த பகுதிகளிலும் அதி கூடிய அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு குறிப்பிட்டவொரு பிரதேசத்தைப் பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கும் போது , ஏனைய பகுதிகளில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் அல்லது மக்களின் முழுமையான ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் அவ்வாறான பகுதிகளில் மீண்டும் பல கிளை கொத்தணிகள் உருவாகக் கூடும்.

இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய பிரதேசங்கள் இவ்வாறான அபாயமுடையவை என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் அபாய நிலைமை தீவிரமாக அதிகரித்துச் செல்கிறது.

கொழும்பில் அபாய நிலைமையை அவதானித்து வரும் அதே வேளை , களுத்துறையிலும் நிலைமையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

களுத்துறை மாவட்டத்தில் இது வரையில் 55 கர்ப்பிணி தாய்மாருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளது. அந்த 55 பேரில் 45 பேர் அட்டலுகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அது மாத்திரமின்றி காலி, பொலன்னறுவை, மத்தியமலை நாட்டில் பெருந்தோட்டப் பிரதேசங்கள் என்பவற்றிலும் தற்போது அபாய நிலைமை ஏற்பட்டுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் பாடசாலை மாணவர்களுக்குக் கூட தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இவற்றை முறையாக முகாமைத்துவம் செய்யாவிட்டால் பாரிய பாதிப்புக்களுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றார்.

களுத்துறை சுழற்சி நிருபர்

 

Mon, 12/21/2020 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.