வைரஸ் தாக்கத்திற்கு தினமும் 5 சிறார்கள்

இதுவரை 70 சிறார்களுக்கு தொற்று உறுதி

கொழும்பு, லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஜீ. விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.

இதுவரை 70 சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் தினமும் வைத்தியசாலைக்கு சிகிச்சை பெற வரும் சிறுவர்களில் ஐந்து பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வரும் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தற்செயலாக மேற்கொள்ளப்படும் பிசிஆர் பரிசோதனைகளின் போது தினமும் ஐந்துக்கு குறையாத நபர்கள் வைரஸ் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:

வைத்தியசாலைக்கு தினந்தோறும் சிகிச்சைக்காக வருபவர்களிடம் பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு வருபவர்கள் வைரஸ் தொற்றுக்குள்ளாகி உள்ளார்களா? என்பதை இனங்காணும் வகையிலேயே பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அவ்வாறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் போதே வைரஸ் தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றனர்.20 நாள் குழந்தைகளில் இருந்து 14 வயது சிறுவர்கள் வரை வைரஸ் தொற்று நோயாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிறு குழந்தைகளே பெருமளவில் இருக்கின்றனர். பெற்றோர்கள் அல்லது உறவினர்கள் அவர்களை ஸ்பரிசிக்கின்றமையே அதற்கு முக்கிய காரணம். அதேபோன்று பெற்றோர்கள் கவனயீனமாக பிள்ளைகளை சமூகத்தில் உலவ விடுவதும் அதற்கு ஒரு காரணமாகுமென்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 12/21/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை