ஆப்கானில் பொதுமக்களின் உயிரிழப்பு 330 வீதம் உயர்வு

அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணிப் படைகளின் வான் தாக்குதல்களில் கொல்லப்படும் ஆப்கானிஸ்தான் பொதுமக்கள் எண்ணிக்கை 2017 தொடக்கம் 330 வீதமாக அதிகரித்திருப்பதாக அமெரிக்காவின் ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

2019 ஆம் ஆண்டில் மாத்திரம் இவ்வாறான தாக்குதல்களில் சுமார் 700 பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாக பிரவுன் பல்கலைக்கழக, ‘போரின் இழப்புத் திட்டம்’ குறிப்பிட்டுள்ளது.

2001இல் செப்டெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற அமெரிக்காவின் படையெடுப்பின் முதல் ஆண்டுக்குப் பின்னர் பதிவான அதிக எண்ணிக்கையாக இது உள்ளது.

2017இல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் போர் நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆப்கானில் நிலைகொண்டுள்ள அமெரிக்க துருப்புகளின் எண்ணிக்கை குறைந்திருப்பதன் காரணமாகவே வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதோடு, இது தலிபான்களை பேச்சுவார்த்தைக்கு அழுத்தம் கொடுப்பதை இலக்காகக் கொண்டிருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரியில் தலிபான்களுடன் உடன்படிக்கை ஒன்றை எட்டிய அமெரிக்கா அதன் வான் தாக்குதல்களில் இருந்து வாபஸ் பெற்றது. நாட்டில் உள்ள தமது துருப்புகளின் எண்ணிக்கையை குறைப்பதற்கு அமெரிக்கா இணங்கியது.

Wed, 12/09/2020 - 11:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை