மஹர சிறை அமைதியின்மை; காயமடைந்த கைதிகளில் 26 பேருக்கு கொரோனா

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த  71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகமை போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் ஷெல்டன் பெரேரா தெரிவித்துள்ளார்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட குழப்ப நிலையை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 08 பேர் பலியாகியுள்ளதுடன் 71 பேர் காயமடைந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ள குழப்பகரமான சம்பவத்தையடுத்தே சிறைக்கைதிகள் 08 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கைதிகள் சிலர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது அங்கு பதற்ற நிலை ஏற்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. அதனையடுத்து அங்கு தீப்பரவலும் இடம்பெற்றதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்தார். கைதிகளுக்கிடையிலான குழப்பத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் போதே 08 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 58 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்தோர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு 08 பேர் மரணமடைந்ததாக ராகம ஆஸ்பத்திரி பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ஷெல்டன் பெரேரா தெரிவித்தார்.

கைதிகள் தப்பிச் செல்ல முயற்சித்த வேளை கைதிகளுக்கு இடையிலான குழப்பம் ஏற்பட்டதாகவும் மேற்படி குழப்ப நிலையை கட்டுப்படுத்துவதற்காக நேற்று முன்தினம் இரவு விசேட அதிரடிப் படையினர் அங்கு அழைக்கப்பட்டுள்ளதுடன் அதன்போது சிறைச்சாலை அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் கைதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண நேற்று முன்தினம் இரவு தெரிவித்தார். அதனையடுத்து இடம்பெற்ற மோதல்களில் 58 பேர் காயமடைந்துள்ளனர்.

மேற்படி நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக அங்கு ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அனுப்பப்பட்டன. அத்துடன் சிறைச்சாலை சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக விசேட அதிரடிப்படையின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் மேலும் சில குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப் பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 71 பேரில் 48 பேருக்கு துரித என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர்களுள் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ராகம வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 10 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 12/01/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை