யாழில் 240 இடைத்தங்கல் முகாம்கள் தயார் நிலையில்

- முல்லைத்தீவில் 440  பேர் இடைத்தங்கல் முகாமில்

காலநிலை சீரின்மையால் யாழ்.மாவட்டம் பாதிப்பினை எதிர்கொள்ளும் என எதிர்வு கூறப்பட்டுள்ளமையால் மக்களை அவதானமாக இருக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவுறுத்தியுள்ளார்.

நேற்று யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

நேற்று முன்தினம் யாழ்.மாவட்டத்திற்கும் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்தது. நாங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அனர்த்த முகாமைத்துவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளோம்.

கடற்படை, இராணுவம், பொலிசார் மற்றும் அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர்கள் இணைந்து ஒரு செயற்படுத்துகை குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 24 மணி நேரம் கடமையில் இருந்து நிலைமைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டு இருப்பார்கள். அனர்த்த முகாமைத்துவ பிரிவினால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த 30ஆம் திகதி முதல் மீனவர்களை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவித்துள்ளோம்.

தொழிலாளர்கள் தமது படகுகளை பாதுகாப்பாக தரித்து விடுவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிக்கும் மக்களை தேவை ஏற்படின் அவர்களை அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றி வேறு இடங்களில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். அவ்வாறாக யாழ் .மாவட்டத்தில் 240 மையங்கள் தயார் நிலையில் உள்ளன.

கரையோர மக்கள் விழிப்பாக கால நிலைகளை உன்னிப்பாக அவதானிக்குமாறு அறிவுறுத்தி உள்ளோம். தாழ் நில பகுதிகளில் வசிப்போர் விரும்பின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளுக்கு சென்று தற்காலிகமாக தங்க முடியும்.

அவ்வாறு தங்க வசதி இல்லாதோர் பொது கட்டடங்களில் தங்க முடியும்.

பொது இடங்களில் தங்க செல்வோர் தற்போதைய கொவிட் -19 நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும். சுகாதார பிரிவினர் அவை தொடர்பில் கண்காணிப்பார்கள். வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வெளியேறும் போது அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களில் போய் தங்குமாறு கோருகின்றோம். அது அவர்களையும் பாதுகாக்கும் இந்த சமூகத்தையும் பாதுகாக்கும்.

ஆபத்தான மரங்கள் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும், அதேவேளை மின்சார தடைகள் ஏற்பட்டால் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் தொடர்பில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும். திடீர் வெள்ளப் பெருக்கு உள்ளிட்டவற்றுக்கு முகம் கொடுக்க அனைவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

முல்லைத்தீவில் 440 பேர் இடைத்தங்கல் முகாமில்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கத்துடன் கூடிய சூறாவளியால் முல்லைத்தீவு மாவட்டத்தில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கப்பட்ட நிலையில் 440 பேர் மூன்று பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்தார்.

கொக்குளாய் கிழக்கு,மேற்கினை சேர்ந்த மக்கள் இவ்வாறு வீடுகளிலிருந்து பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அரச அதிபர் மேலும் கூறுகையில்,

கரையோர பகுதியினை சேர்ந்த கொக்குளாய் கிழக்கு, மேற்கு பகுதியினை சேர்ந்த 440 பேர் கொக்குத்தொடுவாய் அ.த.க பாடசாலை, கருநாட்டுக்கேணி அ.த.க.பாடசாலை,கொக்குளாய் அ.த.க.பாடசாலைகளில் தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். தொடர்ச்சியான நிலமையின் பின்னர் அவர்களை வீடுகளுக்கு அனுப்புவது தொடர்பில் தீர்மானிக்கப்படும்.

இவர்களுக்கான சமைத்த உணவு மற்றும் உதவிகளை மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் என்றார்.

யாழ்.விசேட நிருபர், புதுக்குடியிருப்பு விசேட நிருபர்

Thu, 12/03/2020 - 14:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை