2028இல் சீன பொருளாதாரம் அமெரிக்காவை பின்தள்ளும்

முன்னர் எதிர்வுகூறப்பட்டதை விடவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாக 2028 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவை பின்தள்ளி உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக சீனா உருவெடுக்கும் என்று அறிக்கை ஒன்று குறிப்பிட்டுள்ளது.

கொவிட்–19 தொற்றை சீனா திறமையான முறையில் கையாளுவதால் ஒப்பீட்டளவில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை விட சீன பொருளாதாரம் எதிர்வரும் ஆண்டுகளில் வளர்ச்சி அடையும் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட பொருளாதார மற்றும் வர்த்தக ஆய்வுக்கான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் பொருளாதார அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 26 ஆம் திகதி வெளியிடப்பட்டு வருகிறது.

கொரோனா தொற்றினால் முதலில் பாதிக்கப்பட்ட நாடான சீனா அதற்கு எதிராக கடும் கட்டுபாடுகளை கொண்டுவந்து நாட்டு பொருளாதாரம் மீண்டும் ஸ்தம்பிக்காது பாதுகாத்துள்ளது.

இதனால் 2020 இல் ஏனைய பெரிய பொருளாதாரங்களில் மந்தநிலை ஏற்பட்டபோதும் சீன பொருளாதாரம் இந்த ஆண்டு 2 வீத வளர்ச்சியை பதிவு செய்தது.

இதன்படி சீனப் பொருளாதாரம் அடுத்த 5 ஆண்டுகளில் சராசரியாக 5.7 வீதம் வளர்ச்சிகாணும். அதன் பின்னர் 2026 ஆரம்பித்து 5 ஆண்டுகளுக்கு வளர்ச்சி நாலரை வீதமாக இருக்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

ஒப்புநோக்க அடுத்த ஆண்டு அமெரிக்கப் பொருளாதாரம் வலுவாக மீண்டுவந்தாலும், 2022 முதல் 2024ஆம் ஆண்டு வரை 1.9 வீதம் மட்டுமே வளர்ச்சியடையும். அதன் பின்னர் அது 1.6 வீதமாக குறையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது.

2030ஆம் ஆண்டு வரை உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் என்ற நிலையை ஜப்பான் தக்கவைத்துக்கொள்ளும். அதன் பின் இந்தியா அந்த நிலையை எட்டும் என்று ஆய்வாளர்கள் கூறினர்.

Mon, 12/28/2020 - 08:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை