கண்ணிவெடி அகற்றும் பணி 2022 இல் முழுமையாக நிறைவு

இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த

2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுற்ற பின்னர் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி அகற்றும் பணிகள் இன்றும் தொடர்கின்றன. 2021 மற்றும் 2022ம் ஆண்டு காலப் பகுதிக்குள் முழுமையாக கண்ணிவெடிகளை அகற்றி முடிக்கலாம் என இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்.

நேற்று கிளிநொச்சிக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் முகமாலையில் நடைபெறுகின்ற கண்ணிவெடி அகற்றும் செயற்பாட்டை பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

கண்ணிவெடி அகற்றும் பிரதேசங்களை பார்வையிட்டிருந்தேன்.

அந்த வகையில் மேலும் காணப்படும் கண்ணிவெடி அகற்றும் பகுதிகள் எவ்வளவு என்பதையும் அதனை அகற்றுவதற்கு எடுக்கக்கூடிய காலப்பகுதி தொடர்பிலும் அறிந்து கொண்டேன்.

அந்த வகையில் மேலும் 13 சதுர கிலோ மீட்டர் வரை முகமாலை பகுதியில் கண்ணிவெடிகளை அகற்ற வேண்டியுள்ளது. இச் செயற்பாட்டில் இலங்கை இராணுவத்தினரும், நிறுவனங்களும் பாரிய லேலையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களின் வேண்டுகையின் அடிப்படையில் இங்குள்ள மக்களை மீள குடியேற்றவும், அப்பகுதியை விடுவிக்கவும் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக் இப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அது தொடர்பில்தான் பார்வையிடுவதற்கு வந்திருந்தேன். இந்த வேலைகளை முடிப்பதற்கு 70 மில்லியன் வரை தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இயலுமானவரை குறித்த பகுதியிலிருந்து கண்ணிவெடிகளை அகற்றி அப்பகுதிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

இதேவேளை இப் பகுதியை பார்வையிட்ட சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் மீட்கப்படும் வெடி பொருட்கள், அமெரிக்கா, ஈரான், பாகிஸ்தான், உள்ளிட்ட நாடுகளில் தயாரிக்கப்பட்ட வெடிபொருட்களும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட வெடி பொருட்களும் அதிகளவில் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பரந்தன் குறுாப் நிருபர்

 

Wed, 12/23/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை