உலக கொவிட்-19 உயிரிழப்பு 1.5 மில். தாண்டியது; நாளுக்கு 10,000 பேர் பலி

உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் உயிரிழப்பு 1.5 மில்லியனுக்கு மேல் அதிகரித்திருப்பதோடு வாராந்தம் சராசரி எண்ணிக்கையாக ஒன்பது வினாடிக்கு ஓர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அபிவிருத்தி அடைந்த ஒருசில நாடுகளுக்கு தடுப்பு மருந்துகள் இந்த மாதத்தில் கிடைக்கப்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொவிட்–19 தொற்றினால் கடந்த இரண்டு மாதங்களில் மாத்திரம் அரை மில்லியன் பேர் உயிரிழந்திருப்பது, இந்த நோயின் தீவிரம் வெகு தொலைவில் உள்ளது என்பதைக் காட்டுகிறது. உலகெங்கும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் சுமார் 65 மில்லியனைத் தொட்டிருப்பதோடு, இதனால் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் நாடான அமெரிக்கா தற்போது மூன்றாவது அலைத் தாக்கம் ஒன்றுக்கு முகம்கொடுத்துள்ளது.

கடந்த வாரத்தில் மாத்திரம் ஒவ்வொரு நாளிலும் சராசரியாக உலகில் 10,000க்கும் அதிகமானவர்கள் இந்த நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். இது ஒவ்வொரு வாரமும் ஸ்திரமான அதிகரிப்பைக் காட்டி வருகிறது.

பல நாடுகளும் முதல் அலைத் தாக்கத்தை விடவும் தீவிரம் கொண்ட இரண்டு மற்றும் மூன்றாவது அலைத் தாக்கங்களை எதிர்கொண்டிருப்பதோடு, நாளாந்த வாழ்வில் கடும் கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளன.

இந்த பெருந்தொற்று 2019 இல் காசநோயினால் உயிரிழந்தவர்களை விடவும் அதிகம் என்பதோடு, மலேரியாவினால் ஏற்படும் உயிரிழப்புகளை விடவும் சுமார் நான்கு மடங்கு அதிகம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. தடுப்பு மருந்து பரந்த அளவில் கிடைக்கப்பெறுவதற்கு முன்னர் நாட்டின் கடுமையான சுகாதார நெருக்கடி நிலை இன்னும் ஒருசில மாதங்களுக்கு இந்த வைரஸினால் அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மத்திய நிலையத்தின் தலைவர் ரொபர்ட் ரெட்பீல்ட் எச்சரித்துள்ளார்.

‘இந்த நாட்டின் பொதுச் சுகாதார வரலாற்றில் மிகக் கடினமான நேரம் ஒன்றை எதிர்கொண்டிருக்கிறோம் என்று நான் உண்மையில் நம்புகிறேன்’ என்று ரெட்பீல்ட் இணையம் ஊடான மாநாடு ஒன்றில் வைத்து குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவில் மாத்திரம் 273,000 க்கும் அதிகமான உயிரிழப்புகள் பதிவாகி இருக்கும் நிலையில் அந்த நாடு உயிரிழப்பு எண்ணிக்கையில் உலகில் முதலிடத்தில் இருப்பதோடு வட அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க பிராந்தியங்களை ஒன்றிணைத்தால் அது உலகெங்கும் மொத்த உயிரிழப்பில் 50 வீதத்திற்கு அதிகமாக உள்ளது. உயிரிழப்பில் உலகில் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியமாக இருக்கும் லத்தீன் அமெரிக்காவில் அண்மையில் உயிரிழப்பு எண்ணிக்கை 450,000ஐ தாண்டியது.

தடுப்பு மருந்தின் எதிர்பார்ப்பு

பிரிட்டன் கடந்த புதன்கிழமை முதல் நாடாக ஜெர்மனியின் பயோஎன்டெக் மற்றும் பைசர் இன்க் மேம்படுத்திய தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளித்தது. இது உலகெங்கும் தடுப்பு மருந்தை பெறும் திட்டத்தை ஆரம்பித்து வைப்பதாக உள்ளது. எனினும் ஆரம்பக் கட்டத்தில் தடுப்பு மருந்தின் விநியோகம் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அமையவுள்ளது. இதனால் அபாய நிலை அடிப்படையிலேயே ஆரம்பத்தில் இந்த தடுப்பு மருந்தை பல நாடுகளும் பயன்படுத்தவுள்ளன.

டிசம்பர் நடுப்பகுதியில் அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை அமைப்பு தடுப்பு மருந்துக்கு ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள் ஆபிரிக்க மக்கள் தொகையில் 60 வீதமானவர்களுக்கு தடுப்பூசியை வழங்க திட்டமிட்டிருப்பதாக ஆபிரிக்க ஒன்றியத்தின் நோய்க் கட்டுப்பாட்டுக் குழு குறிப்பிட்டுள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட ஆபிரிக்க பிராந்தியத்தில் 2.2 மில்லியன் நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தரவுகள் காட்டுகின்றன.

Sat, 12/05/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை