திட்டமிட்டபடி ஜனவரி 18இல் O/L பரீட்சைகள் இடம்பெறாது

திட்டமிட்டபடி ஜனவரி 18இல் O/L பரீட்சைகள் இடம்பெறாது-GCE OL Exam Will Not Held As Scheduled-GL Peiris

- புதிய திகதி பரீட்சைக்கு 6 வாரங்களுக்கு முன் அறிவிக்கப்படும்

எதிர்வரும் ஜனவரி 18ஆம் திகதி நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைகளை (GCE O/L) தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நடாத்த முடியாதுள்ளதாக, கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று (01) பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சு உட்பட நான்கு இராஜாங்க அமைச்சுகள் தொடர்பில் இடம்பெறும் குழுநிலை விவாதத்திலேயெ அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அதற்கமைய, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் அதற்கு தயாராகும் வகையில், பரீட்சைகள் ஆரம்பமாகும் புதிய திகதி, பரீட்சை இடம்பெறுவதற்கு 6 வாரங்களுக்கு முன்னதாக, அறிவிக்கப்படும் என்றும் அவர் இதன்போது தெரிவித்தார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் ஜனவரி 18 - 27 வரை நடாத்துவதற்கு இதற்கு முன்னர் தீர்மானிக்கப்பட்டிருந்தது.

தற்போதுள்ள நிலையில், தரம் 11 இல் கல்வி பயிலும் மாணவர்களில் 50% ஆன மாணவர்களால் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

நாட்டில் தற்போது காணப்படும் நிலைமையை இரு வாரங்களுக்கு ஒரு முறை ஆராய்ந்து, பரீட்சைகளை நடாத்துவதற்கு ஏதுவான நிலைமையை அறிந்து அது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர்,
பாடசாலைகளில் மாணவர்களின் வருகை 50 சதவீதமாக காணப்படுகிறது. ஆபத்தான பிரதேசங்களாக அடையாளம் காணப்பட்டுள்ள பகுதிகளின் பாடசாலைகள் இதுவரை திறக்கப்படவில்லை ஏனைய பிரதேசங்களில், பாடசாலைகளை திறப்பதற்கான முடிவை பாடசாலை அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைகளை நடத்துவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.

விஞ்ஞானம் மற்றும் ஆங்கில பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. இதற்காக டிப்ளோமாதரிகளுக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என அவர் தெரிவித்தார்.

Tue, 12/01/2020 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை