WHO வின் அவதானம் மிக்க நாடுகள் பட்டியலில் இலங்கை

- 25 % மக்களுக்கு உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

உலகளாவிய காலநிலை மாற்றத்தால் அதிக அவதானம் மிக்க 10 நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதுடன், உலக உணவு தாபனத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் நாட்டின் 25 சதவீதமான மக்கள் உணவு பற்றாக்குறையை எதிர்கொள்ள வேண்டிய அபாய நிலையும் காணப்படுவதாக தெரிவித்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் சமால் ராஜபக்ஷ, இந்த நிலைமையிலிருந்து நாட்டை பாதுகாத்துக்கொள்ள தேவையான உரிய நீர்பாசன திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் மீதான 04ஆம் நாள் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

நீர் பற்றாக்குறைக்கு முகங்கொடுக்கும் மக்கள் தொகை இரண்டு பில்லியனாக உலகில் அதிகரித்துள்ளது. நீண்டகால வளிமண்டலவியல் மாற்றத்தை நாம் எதிர்கொண்டு வருகிறோம். உலகில் காணப்படும் 184 நாடுகளில் காலநிலை மாற்றத்தில் மிகவும் அவதானம் மிக்க 10 நாடுகளுக்கு இலங்கையும் காணப்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகில் காலநிலை மாற்றம் தொடர்பிலான பட்டியலில் இலங்கை 06ஆவது இடத்திலுள்ளது.

இதனால் நீண்டகால வறட்சி அதிக மழை பொழிவு நிலைகள் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. இதனால் வாவிகள், அணைக்கட்டுகளுக்கு பாதிப்பு ஏற்படக் கூடும். திடீர் வெள்ளப் பெருக்குகளும் ஏற்படும் அபாயம் காணப்படுகிறது. நீர் மூலாதாரங்களை பாதுகாத்துக்கொள்வதற்கான நிதி மற்றும் மனித வளங்கள் எமது நாட்டில் போதாதுள்ளது. குடிப்பதற்கு பயன்படுத்தப்படக் கூடிய நீரில் நூற்றுக்கு 85 சதவீதமான நீர் விவசாயம் செய்யவும் குடிநீராகவும் பயன்படுத்தப்படுகிறது.
சுதந்திரத்திற்குப் பின்னர் அனைத்து அரசாங்கங்களும் பாரிய நீர்பாசன திட்டங்களை உருவாக்கியுள்ள போதிலும் இயற்கை நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான உரிய அவதானங்கள் இதுவரை செலுத்தப்படவில்லை. 2020இல் உலக உணவு உற்பத்தி வீழ்ச்சிக்கண்டுள்ளதால் 135 மில்லியன் கடுமையான உணவு பற்றாக்குறையை எதிர்நோக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். உலக உணவு தாபனத்தின் மதிப்பீடுகளின் பிரகாரம் இலங்கையும் உணவு உற்பதி நெருக்கடிக்கு முகங்கொடுக்கும் நாடாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உணவு இறக்குமதிக்கு சர்வதேச ரீதியில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக நாம் மாற்று வழிமுறைகளுக்கு செல்லாவிடின் நாட்டின் மொத்த சனத்தொகையில் 25 சதவீதம் அதாவது 4.7 மில்லியன் உணவு பற்றாக்குறைக்கு முகங்கொடுக்க நேரிடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதனால்தான் 16 உணவு பொருட்களின் இறக்குமதியை வரையறுத்துள்ளோம். இவை எமது நாட்டில் உற்பத்தி செய்யக் கூடிய உணவு வகைகளாகும். இவற்றை உற்பத்தி செய்வதற்கான செயற்பாடுகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. விவசாயத்துறை நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு 7.8 சதவீத பங்களிப்பை வழங்குகிறது. நாட்டின் மொத்த சனத்தொகையில் 25.7 சதவீதமானவர்கள் நேரடியாக விவசாயத்துறையில் தமது வாழ்வாதாரத்தை ஈட்டுபவர்களாக உள்ளனர். விவசாயத்துறை மூலம் நாட்டு மொத்த சனத்தொகைக்கும் தேவையான அரிசி, மரக்கறி, பழங்கள், தானியங்கள், சிறு ஏற்றுமதி பயிர்கள், தேயிலை, இறப்பர் 100 சதவீதம் பூர்த்தி செய்துக்கொள்வதற்கான நீர்பாசன முறைமைகளை முகாமைத்துவம் செய்துக்கொள்ள அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.

நீர்பாசனமுறை அனைத்தும் ஒரு அமைச்சின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. கூட்டு நீர்பாசன முகாமைத்துவ முறையொன்றை ஏற்படுத்தியுள்ளோம். மக்கள் பாவனை, விவசாயம், கைத்தொழில், இயற்கை, சுற்றுலாத்துறை என்ற அடிப்படையில் நீர்த்தேவை உள்ளது.

ஷம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 11/27/2020 - 10:48


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை